சிறந்த விளையாட்டு மாநிலமாக தமிழகம் தேர்வு. திருச்சி கருத்தரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

Filed under: தமிழகம் |

சிறந்த விளையாட்டு மாநிலமாக தமிழகம் தேர்வு. திருச்சி கருத்தரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

தமிழகத்தில் 100 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 18 கோடி நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்
என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருச்சி தேசியக்கல்லூரியில் சர்வதேச விளையாட்டு (ஐசிஆர்எஸ்) கருத்தரங்கு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று கருத்தரங்கு தொடக்க விழா நடந்தது.

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்
கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சரும் கருத்தரங்கின் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியேரர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
பின்பு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி நினைவு பரிசினை வழங்கினார்.

விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். பின்னர்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசியதாவது:-

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முயற்சியால் செஸ் ஒலிம்பியாட், கேலோ விளையாட்டு, நீச்சல், ஹாக்கி சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டது. குறிப்பாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியலின் பதக்க பட்டியலில் தமிழகம் 2 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழகம் முதல் 3 இடங்களுக்குள் பிடித்தது இதுவரையில்லாத சிறப்பிடமாகும். இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் மாறி வருகிறது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தால் அங்கு வாள்வீச்சு பயற்சியில் ஈடுபடமுடியாத வீரர்களுக்கு விமான கட்டணம், உணவு, உறைவிடம், பயிற்சி அனைத்தும் தமிழகத்தில் அளிக்கப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் பயிற்சி மேற்கொண்ட மணிப்பூர் வீரர்கள், கேலோ விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை மூலம் 100 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 18 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 பிரிவுகளில் நடைபெறும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொள்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த டாஸ்காம் சர்வதேச அறிவியல் மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞாணிகள் கலந்து கொண்டனர். அதனையொட்டி மதுரை அறிவியல் விளையாட்டு மையம் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் சிறந்த விளையாட்டு மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு மும்டையில் நடக்கும் விழாவில் இதற்கான விருது வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.

விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் :

தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், விளையாட்டு துறையை முதல் நிலைக்கு எடுத்து சென்ற பெருமைக்குரியவர் நமது அமைச்சர் உதயநிதி. நீட் தேர்வுபோல அல்லாமல் திறமை இருந்தால் விளையாட்டு போட்டியில் உயர்நிலை அடையலாம். திருச்சியில் ஒலிம்பிக் பயிற்சிக்கான மையம் அமைவதற்கு 50 ஏக்கர் பரப்பளவில் நிலம் வழங்கினோம். அதுபோல திருச்சியில் விளையாட்டு பல்கலைகழகம் அமைவதற்கு விளையாட்டு துறை அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும். லால்குடிஆரோக்கியராஜ், சேலம் மாரியப்பன் போன்ற வீரர்கள் தமிகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர் என்றார். முன்னதாக கருத்தரங்க மலரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட அமைச்சர் கே.என். நேரு பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், விளையாட்டு வீரர்கள் ஸ்ரீராம் சீனிவாஸ், அக்ஷயா, கிஷோர், ஹரிஸ்ராகவ், கோபிநாதன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கில் 50 நாடுகளை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுனர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். விளையாட்டு துறை மறுமலர்ச்சிக்கான உத்திகள், வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, குறும்படம், போஸ்டர் தயாரிப்பு, உணவு மேலாண்மை, யோகா, மொபைல் போட்டோகிராபி, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கருத்தாக்கில்
மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வீரமணி,மேற்கு மாநகரச் செயலாளர்மேயர் அன்பழகன்,திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மண்டல குழு தலைவருமான மதிவாணன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, தேசிய கல்லூரி செயலாளர் ரகுநாதன், முதல்வர் குமார், எக்ஸல் குழுமத் தலைவர் முருகானந்தம், எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், சௌந்தர பாண்டியன். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக கருத்தரங்க தலைவரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்றார். முடிவில் கருத்தரங்க செயலாளர் மற்றும் துணை முதல்வர் பிரசன்னபாலாஜி நன்றி கூறினார்.