திமுக தொகுதி பங்கிட்டு குழுவில் இடதுசாரிகளுக்கு சமூக நீதி வழங்கியதுபோல முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்.
மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு கூட்டம் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் சீட் வழங்கப்படாததால் திமுக கூட்டணிக்கு தேர்தல் பணியாற்றுவதை புறக்கணிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் பலரும் எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையில் திருச்சியில் நடைபெற்ற கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இருப்பினும் இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரவு அளிப்பது என்றும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட்டு வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து ஆதரவு அளித்தது, 2024 எம்பி தேர்தலிலும் சீட் ஒதுக்கப்படாத நிலையில் 2025 மாநிலங்களவை தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட்டு ஒதுக்க வலியுறுத்தியும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதுடன், உச்சமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவிப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கூறியதாவது :-
மிகுந்த வலியோடு திமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்க வலியுறுத்தினோம். இன்னும் வழங்கப்படவில்லை திமுக தலைவர் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையேல் அடுத்த ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மிக முக்கியமாக நாட்டு நலனை கருதக்கூடியவர்கள் என்பதால் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு தமிழகத்தில் பங்கம் வரக்கூடாது என்பதே எங்களது எண்ணமாகும். திமுக தொகுதி பங்கிட்டு குழுவில் இடதுசாரிகளுக்கு சமூக நீதியை அளித்தது போல, முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம், சமூக நீதியை திமுக வழங்க வேண்டும் என மிக வலிமையாக வலியுறுத்தினோம், மீண்டும் அதனை வலியுறுத்துவோம்.
இந்தியா கூட்டணியை பொருத்தவரை நாளுக்கு நாள் வலிமையடைந்து வருகிறது, ஒரு மாதத்திற்கு முன்னதாக இருந்ததை விட மத்திய பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரம், உத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மற்றும் தென் மாநிலங்களில் வலுவான கூட்டணியை இந்தியா கூட்டணி அமைத்துள்ளது, இந்தியா கூட்டணியின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஆனால் பாஜக வாக்குகளை தன் வசப்படுத்த வேண்டும் என்பதற்காக சூழ்ச்சி செய்து குடியுரிமை திருத்தச் சட்ட விதிமுறைகளை வகுத்து அரசியல் செய்து வருகிறது. இது மோடியையும் பாஜகவையும் தோல்வி பயம் எதிர்கொண்டுள்ளதை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வில், மாநில பொதுச்செயலாளரும் மணப்பாறை எம்எல்ஏ வுமான அப்துல்சமது, பொருளாளர் உமர், துணைப் பொதுச்செயலாளர்கள் யாகூப், தஞ்சை பாதுஷா, திருச்சி மாவட்ட தலைவர்கள் கவுன்சிலர் பைஸ் அகமது (மேற்கு), முகமது ராஜா (கிழக்கு) மாவட்டச் செயலாளர் இப்ராகிம்,இப்ராம்சா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
.