ரூ 1000 கோடி மதிப்பிலான திட்டம் 2025ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும்.
திருச்சியில் பாரிவேந்தர் பேட்டி.
கடந்த 5 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது மத்திய அரசு வழங்கிய ரூ. 17.5 கோடி முழுவதும் மக்கள் நலப்பணிக்கு செலவிடப்பட்டது. இதில் பெரம்பலுாருக்கு ரூ. 3.37 கோடி, லால்குடிக்கு ரூ.3.32 கோடி, மண்ணச்சநல்லுாருக்கு ரூ.2.80 கோடி, துறையூருக்கு ரூ.3.79 கோடி, முசிறிக்கு ரூ.2.40 கோடி, குளித்தலைக்கு ரூ. 2.73 கோடி செலவிடப்பட்டது. இதில் பெரும்பகுதி தொகை அரசு பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறைகள், கழிவறை, நீர்த்தொட்டிகள் கட்டப்பட்டது. இது தவிர எனது சொந்த செலவில் ரூ. 126 கோடி பெரம்பலுார் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டிற்கு செலவிடப்பட்டுள்ளது.
பெரம்பலுார் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் எஸ்ஆர்எம் கல்லுாரிகளில் கல்வி கற்பதற்கு, உறைவிடம் ஆகியவற்றுக்கு மட்டும் ரூ. 118 கோடி செலவிடப்பட்டது. கரோனா காலத்தில் 2 ஆம்புலன்ஸ், மருத்துவமனைக்கு படுக்கைகள், ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள் வழங்கப்பட்டது. பல கோயில்களை புனரமைப்பதற்காக ரூ. 4கோடி 80 லட்சம் வழங்கப்பட்டது.
சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர், சிறுகனுார், இருங்களூர் ஆகிய ஊர்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. கோடை காலங்களில் பெரம்பலுார் உள்ளிட்ட பகுதிகளில் நீர்த்தேவைகள் நிறைவேற்றப்பட்டது.
காமராஜர் ஆட்சியில் திட்டமிடப்பட்ட துறையூர், பெரம்பலுார், அரியலுார், நாமக்கல் ஆகிய பகுதிகளை ரயில்வே பாதை மூலம் இணைக்கும் பணிக்கான மறு ஆய்வு சமீபத்தில் நடந்துள்ளது. ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த பகுதிகள் மேம்பாடு அடையும். 2025ம் ஆண்டிற்குள் இந்த ரயில் பாதை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை உறுதியளித்துள்ளது. பாராளுமன்றத்தில் 268 கேள்விகள், 39 பங்கேற்ற விவாதங்களில் பங்கேற்றேன்.
பெரம்பலுர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாஜ கட்சி கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். ஏழை மக்கள் கட்டும் வரி பணத்தை தங்களுக்கு சொந்தமாக்கி கொள்வது தவறானது.
சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட பல நாடுகளில் திமுகவினர் லஞ்ச பணத்தை முதலீடு செய்துள்ளனர். தங்களுக்கு சாதகமாக இல்லாத தொலைக்காட்சியை செயலாற்ற விடுவதில்லை. அரசாங்கத்தில் எந்த செயல் நடக்க வேண்டும் என்றாலும் லஞ்சம் தர வேண்டிய நிலைமை உள்ளது. தங்கள் குடும்பமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற பதவி வெறி வந்தவுடன் நேர்மை மறைந்து விட்டது. தேர்தலில் அனைத்துக் கட்சியினரும் தனியாக நின்றால்தான் சொந்த பலம் தெரிய வரும். அரசியலுக்கு வருபவர்கள் ஆதாயம் நினைத்து வரக் கூடாது என அண்ணா சொன்னதை திமுகவினர் மறந்து விட்டனர். அனைத்து அரசு நிறுவனங்களுக்கு கருணாநிதி பெயரை வைப்பது எவ்விதத்தில் நியாயம். இதுபோல செய்தால் மக்களுக்கு அலுப்பு வந்துவிடும். உங்கள் சொந்தக் கட்சி செலவில் எதுவேண்டுமானலும் செய்து கொள்ளுங்கள். விளம்பரத்தால் மட்டுமே வாழ முடியாது.
காமராஜர் எந்த திட்டத்திற்கும் தனது பெயரை வைக்க விரும்ப மாட்டார். திமுகவிடம் தேசிய பார்வையில்லாததால் அந்த அணியிலிருந்து நான் விலக நேரிட்டது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தேசிய பார்வை இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.