பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க மாநில குழுவுக்கு அதிகாரம்.

Filed under: தமிழகம் |

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க மாநில குழுவுக்கு அதிகாரம்.

திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம்.

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றது. மேலும், கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் சம்மந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநில தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கடந்த பத்தாண்டு பாஜக ஆட்சியின் அவலத்தை, மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும், அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும், கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் மாநில சுயாட்சிக்கு எதிரான போக்கையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, சிறுபான்மை மக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது,
தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.