கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலுக்கு, இரண்டு பேர் உயிரிழப்பு.

Filed under: தமிழகம் |

கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலுக்கு, இரண்டு பேர் உயிரிழப்பு.

கர்நாடகாவின், உத்தர கன்னடா, ஷிவமொகா, சிக்கமகளூரு மாவட்டங்களில், ‘கியாசனுார் வன நோய்’ என்றழைக்கப்படும், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் கர்நாடக பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த கியாசனுார் வனப்பகுதியில், 1957ல் இந்த காய்ச்சல் முதல்முறையாக கண்டறியப்பட்டது.

மனித உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலான இந்த வைரஸ் காய்ச்சல், தெற்காசியாவின் பல்வேறு நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களிலும் குரங்கு காய்ச்சல் தற்போது பரவ துவங்கி உள்ளது. முதலில், 18 வயது பெண் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த பெண்ணின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

அடுத்ததாக, உடுப்பி மாவட்டத்தின் சிக்கமகளூரை சேர்ந்த 79 வயது முதியவர், குரங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.

இதுவரை, 50 பேருக்கு குரங்கு காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தொற்று தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுஉள்ளனர்.

குரங்கு காய்ச்சல் என்றால் என்ன?

‘ஹீமாபிசலிஸ் ஸ்பினிகெரா’ இனத்தை சேர்ந்த உண்ணிகள், குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் உடம்பில் இருந்து ரத்தத்தை குடிக்கும்போது, அந்த விலங்குகளிடம் உள்ள வைரஸ், உண்ணிகளுக்கும் தொற்றிக் கொள்கின்றன.

அந்த உண்ணிகள் வனப்பகுதிகளில் மனிதர்களுடன் தொடர்பில் வரும்போது, மனிதர்களுக்கும் இந்த தொற்று பரவுகிறது.

உண்ணி கடித்த மூன்று முதல் எட்டு நாட்களில் அறிகுறிகள் தென்பட துவங்கும். கடுமையான காய்ச்சல், தலைவலி, தசை வலி, உடல் சோர்வு, இரைப்பை குடல் தொந்தரவுகள், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.

தீவிர தொற்று பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு மூளை அழற்சி, கல்லீரல் அழற்சி, உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. குரங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை முறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.