இத்தேர்தலோடு திமுக காற்றோடு கரைய வேண்டும். திருச்சி அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பழனிச்சாமி பேச்சு.

Filed under: தமிழகம் |

இத்தேர்தலோடு திமுக காற்றோடு கரைய வேண்டும். திருச்சி அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பழனிச்சாமி பேச்சு.

அதிமுக கூட்டணி சார்பில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரப் பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டில் நேற்று நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி, அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 40 வேடபாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது.

வரும் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக என மூன்று அணிகள் களம் கண்டாலும், போட்டி என்று வந்தால் திமுக – அதிமுக தான். முதல்வர் ஸ்டாலின், பிரமதர் மற்றும் என்னைப் பற்றியும் மட்டும் தான் விமர்சித்து பேசுவார். சரக்கு இருந்தால் தானே பேச முடியும். பொம்மை முதல்வரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். தமிழகத்தை குட்டிச்சுவாராக்கிவிட்டதாக ஸ்டாலின் பேசுகிறார். உங்கள் குடும்பத்திடமிருந்து தமிழகத்தை மீட்டு, காத்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா தான். திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சி அலேங்கோல, மக்கள் விரோத ஆட்சி.

அதிமுக ஆட்சியில் தமிழகத்துக்கு 11 மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பு வர அதிமுக தான் காரணம். ஆனால் அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என உதயநிதி ஸ்டாலின் மூன்று ஆண்டுகளாக ஒரு செங்கலை காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். ரோட்டில் காட்டி என்ன பயன்? விளம்பரத்துக்காக காட்டுகிறார்.
திமுகவுக்கு கடந்த முறை 38 எம்பிக்களை தமிழக மக்கள் தந்தனர். நாடாளுமன்றத்தில் ஒற்றை செங்கலை காட்டி நிதியை பெற்று வந்திருக்கலாம். அங்கு குரல் கொடுத்திருக்க வேண்டும். அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். செய்யவில்லை. அதற்கு துணிவும், திராணியும் இல்லை.
மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் நீட்டை நீக்குவோம் என்று திமுக சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கிடைக்க அதிமுக நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் 2,160 பேர் மருத்துவராகி உள்ளனர். இது தான் சாதனை. குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனியான திமுக மத்தியிலும் ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க பார்க்கிறது.
காவிரியில் தண்ணீர் இல்லாமல் டெல்டாவில் ஸ்டாலினை நம்பி விவசாயிகள் பயிரிட்ட 5.50 லட்சம் ஏக்கரில் 3.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் காய்ந்து கருகியது.
அப்போது அமைந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்ற ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்திருப்பர். ஸ்டாலினுக்கு அதிகாரம் தான் முக்கியம். விவசாயிகள் கண்ணீர் அவருக்கு தோல்வியை தான் தரும்.
பச்சை துண்டு போட்டுக்கொண்டு பழனிச்சாமி பச்சைப் பொய் பேசுவதாக ஸ்டாலின் பேசுகிறார். யார் பச்சை பொய் பேசுவது என மக்களுக்குத் தெரியும்.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்துக்கு ஸ்டாலின் தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். நான் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் நிறைவேற்றினேன்.
மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு துடிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. தமிழகத்துக்கும் விவசாயிகளுக்கும் துரோகம் இழைக்கும் ஸ்டாலினுக்கு தகுந்த பதிலடிக் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அணை கட்டுவதை அதிமுக தடுத்தது.
மத்தியில் 12 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்திலிருந்த திமுக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. குடும்ப உறுப்பினர்கள் தான் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று சிந்தித்தனர். நாட்டு மக்களை பற்றி சிந்திக்கவில்லை. தமிழகத்துக்கு துரோகம் செய்த கட்சி திமுக.
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு காலம் தாழ்த்தியபோது, அதிமுக எம்பிக்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தனர். 38 எம்பிக்கள் உள்ள திமுக என்ன செய்தது?
2ஜி ஊழல் மீண்டும் தூசித்தட்டப்பட்டுள்ளது. யார் யார் சிறை செல்வார்கள் எனத்தெரியவில்லை. அதேபோல இங்குள்ள அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாது. நீதிமன்ற படிக்கட்டில் ஏறி இறங்கும் அவர்கள் எங்கே போவார்களோ அங்கே போவார்கள்.
சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி செயலாளர் ஜாபர் சாதிக், வெளிநாட்டுக்கு போதை பொருள் கடத்தி வந்துள்ளார். தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாற காரணம் திமுகவும் அதன் நிர்வாகிகளும். கஞ்சா விற்றதாக வழக்குப்பதிவு செய்த 2,038 பேரில் 148 பேர் தான் கைது செய்தனர். மற்றவர்கள் திமுகவினர் என்பதல் கைது செய்யவில்லை.
கஞ்சா ஆப்ரேஷன் என்றுக்கூறிய டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு, ‘ஓ 2, ஓ 3 என ஓ போட்டுக்கொண்டே ஓய்வு பெற்றுவிட்டார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. அவல ஆட்சியை செய்யும் ஸ்டாலின், அதிமுக ஆட்சியை குறை சொல்கிறார்.
தேர்தல் பத்திரம் மூலம் ரூ.656 கோடி திமுக பெற்றுள்ளது. நீங்கள் எங்களை பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. எங்கள் மீது வழக்குப்போடுவதாக ஸ்டாலின் பேசி உள்ளார்.
அதிமுகவினர் எத்தனையோ வழக்குகளை சந்தித்துவிட்டோம். நான்கு ஆண்டு காலம் ஆட்சியிலிருந்தேன். நான் நினைத்திருந்தால் உங்கள் அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டிருக்க முடியும். பொறுமையாக இருக்கிறோம். திமுகவினர் நிறைய ஊழல் செய்துள்ளனர். 2026ல் அதிமுக ஆட்சி மலரும். அப்போது பாருங்கள். உப்பை திண்ணவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.
என்ன பிரச்னை வந்தாலும் கட்சியினரை உயிரைக் கொடுத்தாவது காப்பேன். சிறு வயதிலிருந்து எவ்வளவோ சோதனைகளை பார்த்து வந்துள்ளேன். உங்கள் மிரட்டல் உருட்டலுக்கு பயப்படமாட்டேன். வரும் தேர்தல் திமுகவுக்கு மரண அடி கொடுக்கும் தேர்தலாக இருக்க வேண்டும்.
இத்தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு கரைய வேண்டும். தமிழர் உரிமை மீட்பாம் தமிழ்நாடு காப்போம். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு என்றார்.