நீர்த்தேக்க தொட்டியின்றி குடிநீர் வினியோகம் செய்யும் கருவி. திருச்சி என்.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடிப்பு.

Filed under: தமிழகம் |

நீர்த்தேக்க தொட்டியின்றி
குடிநீர் வினியோகம் செய்யும் கருவி. திருச்சி என்.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடிப்பு.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து நீர்த்தேக்க தொட்டியின்றி குடிநீர் வினியோகிக்கும் (டேங்க்லெஸ் வாட்டர் கண்ட்ரோலர்) கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி பயன்பாட்டுக்கு வந்தால் கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீரை வினியோகம் செய்ய நீர்த்தேக்க தொட்டி தேவைப்படாது.

தற்போது பல கிராமங்களில் குடிநீர் வினியோகம் செய்ய முறையான மற்றும் செலவு குறைந்த நீர் வழங்கல் முறை இல்லை. போர்வெல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட முறைகளை செயல்பாட்டில் உள்ளது. இது செலவும் அதிகமாகும் மற்றும் நேரமும் அதிகமாக தேவைப்படும். இதில் பெனமெண்ட் பால், ஜெரால்டு ஜெசிந்த், முரளி கிருஷ்ணா, ராகவ் புக்கபட்னம்,ரஞ்சித் உள்ளிட்ட என்.ஐ.டி. மாணவ குழுவினர் மற்றும் 1983-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் ரிச்சர்டு சேகர், சுரேஷ் ஆகியோர் இந்த கருவியை கண்டுபிடிக்க முக்கிய பங்காற்றினர்.

*கருவியின் விலை ரூ.5 ஆயிரம்*
இது பற்றி கருவியை கண்டுபிடித்த மாணவர்கள் கூறும்போது, ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு சுமார் ரூ.25 லட்சம் தேவைப்படும். அதனை கட்டி முடிக்க 2 ஆண்டுகளாவது தேவைப்படும். ஆனால் தற்போது கண்டுபிடித்துள்ள இந்த கருவியின் விலை ரூ.5 ஆயிரம் மட்டுமே. மேலும் இதனை 30 நிமிடங்களுக்குள் நிறுவ முடியும். இதனால் கிராம மக்களின் தேவைக்கேற்ப குடிநீரை அவர்கள் பகுதிகளில் உள்ள குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின்றி வழங்க முடியும். இதன் மூலம் பொருளாதார இழப்பீடு குறைவதோடு, குடிநீர் வினியோகிக்கும் முறையும் வேகமாக நடைபெறும்.

மேலும் உள்ளாட்சி அமைப்புகளால் குடிநீர் வினியோகிக்கும் நேரத்தை சீராக்கவும், நீர் மேலாண்மையை திறம்பட செயல்படுத்த முடியும். என்றனர்.