அஜீத் பக்கம் திரும்பிய கெளதம்மேனன்!

Filed under: சினிமா |

ajith-gowtham-movஒரு காலத்தில் கெளதம்மேனனின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று பல நடிகர்கள் ஏங்கியதுண்டு. அந்த அளவுக்கு அவரது மேக்கிங் பிரமாண்டமாக இருந்தது.

அதனால்தான், விஜய்கூட அவர் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். அதையடுத்து யோஹன் அத்தியாயம் ஒன்று என அந்த படத்திற்கு டைட்டில் வைத்து விளம்பரம் கொடுத்தார் கெளதம்மேனன்.

பின்னர், படப்பிடிப்புக்கு விஜய்யை அவர் அழைத்தபோது, இன்னும் கதையே சொல்லவில்லையே. அதற்குள் எப்படி நடிப்பது என்றார். ஆனால், யாராக இருந்தாலும் ஒன்லைனை மட்டுமே சொல்லும் பழக்கம் கொண்ட கெளதம்மேனன், அதற்கு உடன்படவில்லை.

அதனால் அப்படத்திலிருந்து விலகினார் விஜய். அதனால் சூர்யாவைக்கொண்டு துப்பறியும் சந்துரு என்றொரு படத்தை இயக்கப்போவதாக அந்த நேரத்தில் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார் கெளதம்.

ஆனால், இடையில் என்ன நடந்ததோ, சில மாதங்களிலேயே துருவநட்சத்திரம் என்று சூர்யாவை வைத்து தான் இயக்கும் படத்திற்கு பெயர் அறிவித்தார் கெளதம். அதற்கான அலுவலக பூஜைகூட போட்டனர்.

அதையடுத்து சூர்யாவும் கதையை கேட்டபோது மீண்டும் பிரச்னை வெடித்தது. இதனால் சில மாதங்கள் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், இப்போது அப்படத்திலிருந்து தான் விலகி விட்டதாக சூர்யாவே அறிவித்து விட்டார். மேலும், அடுத்து லிங்குசாமி இயக்கும் படத்திற்காக தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறார் சூர்யா.

இதற்கிடையே, விஜய்யும் இல்லை, சூர்யாவும் இல்லை. அடுத்தபடியாக அஜீத் பக்கம் திரும்பியிருக்கிறாராம் கெளதம். ஏற்கனவே துப்பறியும் சந்துரு படத்தில் நடிக்கயிருந்தவர் அஜீத்தான். சில பல காரணங்களால் அது நடைபெறவில்லை.

ஆனால், அதே படத்திற்காக மீண்டும் அஜீத்தை நாடுகிறாரா? இல்லை துருவ நட்சத்திரத்திற்காகத்தான் செல்கிறாரா? என்கிற விவரம் முழுசாக தெரியவில்லை. ஆனால் அடுத்து அஜீத்தை வைத்து படம் இயக்கி ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று அரக்க பரக்க கெளதம்மேனன் அலைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.