அணை கட்ட அனுமதி குடுங்க டி.கே.சிவக்குமார்!

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து பேசியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். நீண்ட நாளாக பேச்சு வழக்கில் இருக்கும் மேகதாது திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த மேகதாது திட்டம் தமிழர்களின் நீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தை வெகுவாக பாதிக்கும் என தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தீவிரமாக இருப்பதை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பலரும் விமர்சித்துள்ளனர். மேகதாது திட்டம் குறித்து பேசியுள்ள டி.கே.சிவக்குமார் “மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசிடம் முறையிடுவேன். மேகதாதுவால் காவிரிப் படுகை விவசாயிகளுக்கு பாசனநீர், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும். தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு கோபமா, வெறுப்போ என்றுமே கிடையாது. அவர்களை என் சகோதரர்களாகவே நான் பார்க்கிறேன்” என பேசியுள்ளார்.