அஞ்சல்துறை ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!

Filed under: இந்தியா,தமிழகம் |

புது டெல்லி : அஞ்சலக ஊழியர்களுக்கு, அவர்கள் பணியில் இருக்கும்போது நோய்த் தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய உள்துறையின் அறிவிப்பு : 

அஞ்சல்துறையானது, இன்றியமையாத சேவைகளின் கீழ் வருகிறது என்பதை உறுதி செய்கிறது. கிராம அஞ்சல் சேவகர்கள் உள்ளிட்ட அஞ்சல்துறை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு தபால்களை விநியோகிப்பது, அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு, அஞ்சலக ஆயுள் காப்பீடு, AePS வசதியின் கீழ் எந்த வங்கியில் இருந்தும் எந்தக் கிளையில் இருந்தும் ஒருவர் தனது வீட்டில் இருந்தபடியே பணம் எடுத்துக்கொள்ளுதல் என பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றனர்.

இதனோடு கூடுதலாக, கோவிட்-19 கிட், உணவுப் பொட்டலங்கள், ரேஷன் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை,  மாநில நிர்வாகம் மற்றும் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து அஞ்சல் அலுவலகம் நாடு முழுவதும் விநியோகித்து வருகிறது.  இவ்வாறு அஞ்சல்துறை தனது அலுவலகப் பணிகளோடு கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் சமூக தேவையையும் செய்து வருகிறது.

கோவிட்-19 நெருக்கடி நிலவும் இந்த சூழலில், கிராம அஞ்சல் சேவகர்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சலக ஊழியர்களும், அவர்கள் பணியில் இருக்கும்போது நோய்த்தொற்றுக்கு ஆளானால், அவர்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் உடனடியாக வெளியிடப்படுவதோடு, கோவிட்-19 நெருக்கடியான சூழல் முடியும் வரை இது தொடரும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அறிவிப்பு.