அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அரசு உயர்நிலை பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 17 மாணவ- மாணவியர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மழைக்காலங்களில் பெரிய மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது என்பதை அரசு முன்கூட்டியே அறிந்து அதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பள்ளிகளிலாவது அக்கறையோடு எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தெற்குத்தெரு அரசு உயர்நிலை பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 17 மாணவ-மாணவியர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். சிகிச்சை பெற்றுவரும் மாணவச் செல்வங்கள் அனைவரும் உடல்நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். எனது அறிவுறுத்தலுக்கு இணங்க கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினரும் நேரில் சென்று காயமடைந்த மாணவர்களையும் அவர்தம் பெற்றோரையும் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர். இதே போன்று இன்று திருவள்ளுர், சிறுவானூர், கண்டிகை ஊராட்சி அரசு ஆரம்ப பள்ளியில் மரம்விழுந்து 5 மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பெரிய மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது என்பதை அரசு முன்கூட்டியே அறிந்து அதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பள்ளிகளிலாவது அக்கறையோடு எடுத்திருக்க வேண்டும். இந்த விடியா திமுக அரசு இனியாவது பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு பள்ளிகளில் உறுதி செய்யுமாறும், காயமுற்ற மாணவ-மாணவியருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.