அரிமா சங்கத்தினருடன் டாக்டர் ஹர்ஷவர்தன் கலந்துரையாடல்!

Filed under: இந்தியா |

புது டெல்லி, ஏப்ரல் 29

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன், நாடு முழுவதும் உள்ள அரிமா சங்க உறுப்பினர்களுடன் இன்று காணொளி வாயிலாகக் கலந்துரையாடினார்.

அப்போது, உரையாற்றிய அவர், கொவிட்-19 தொற்றுக்கு எதிராக நாம் நடத்தி வரும் போராட்டத்தில் பாராட்டத்தகுந்த வகையில் பங்களித்து வரும் அரிமா சங்க உறுப்பினர்களின் செயல்பாட்டை நான் மிகவும் மதிக்கிறேன். குறிப்பாக, பிரதமர் கேர்ஸ் நிதி மூலம் பங்களிப்பு, மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள், உணவு, கிருமி நாசினிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE), N95 முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் வழங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோய், கண்புரை உள்ளிட்டவை பற்றிய பிரச்சாரத்தில் பல ஆண்டுகளாக அவர்கள் அளித்துவரும் பங்களிப்பைப் பாராட்டிய ஹர்ஷவர்தன், கொவிட்-19 போராட்டத்திலும் அவர்கள் ஒன்றுபட்டு அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உலகத்தின் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொவிட்-19 தொற்றை முறியடிக்க நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும், என்று அவர் வலியுறுத்தினார். இலட்சக்கணக்கானோருக்கு உணவும், பலரைப் பாதுகாக்கும் மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருவதாகக் கூறி, அவர்களை பாராட்டினார் அமைச்சர் ஹர்ஷவர்தன்.

கொவிட்-19 தொற்றை முறியடிக்கும் இந்தியாவின் அணுகுமுறையை பெருமைபடக் கூறிய அவர், இந்த முறை நமது அணுகுமுறையின்  தனிச்சிறப்பு ஐந்து அம்சங்களைக் கொண்டது,

  • 1) தொடர் விழிப்புணர்வு நிலையைப் பராமரிப்பது,
  • 2) முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர அணுகுமுறை,
  • 3) தொடர் நிலை மதிப்பீட்டின்படி படிப்படியான நடவடிக்கை,
  • 4) அனைத்து மட்டத்திலும் பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, கடைசியாக, ஆனால், மிக முக்கியமாக
  • 5)  இந்தக் கொடிய நோயைக் கட்டுப்படுத்த மக்கள் இயக்கத்தை உருவாக்குதல் என்றார்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் வலிமையைப் பாராட்டிய அவர், இந்தியா கடந்த காலத்திலும், சர்வதேச அளவில் நெருக்கடி மிக்க சுகாதாரச் சிக்கல்களையும், தொற்று நோய்களையும் மிக வெற்றிகரமாகச் சமாளித்துள்ளது’’ என்று கூறினார். சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைக்கு உட்பட்டு, பொது சுகாதார அவசர நிலையைச் சமாளிப்பதில், நமது நாட்டுக்குத் தேவையான தேசியத் திறன்கள் உள்ளன. பெருவாரியாகப் பரவும் தொற்று  நோய்களுக்கான நாடு தழுவிய கண்காணிப்பு முறையான ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (Integrated Disease Surveillance Programme – IDSP) கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. போதுமான  டிஜிடல் உள்ளீடுகளுடன் அது மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களாக, நாட்டில் நோய் இருமடங்காகும் விகிதம் 11.3 நாட்களாக உள்ளது என அவர் கூறினார். உலக அளவில் இறப்பு விகிதம் 7 சதவீதமாக உள்ள போதிலும், இந்தியாவில் அது 3 சதவீதமாக ஆக உள்ளது என்றும், 86 சதவீத இறப்புகள் இணை நோய்களால் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில், 0.33 சதவீத பேருக்கு மட்டுமே செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும், 1.5 சதவீத நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது என்றும், 2.34 சதவீத நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் கூறிய அவர்,  இது நாடு முழுவதும் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தைப் பறைசாற்றுபவை என்றார். எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில், தனிமைப்படுத்தல் படுக்கைகள், செயற்கை சுவாசக்கருவிகள், தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE), முகக்கவசங்களுடன் நாடு தாயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நாட்டில் 288 அரசு பரிசோதனைக் கூடங்களுடன், 79 தனியார் ஆய்வுக்கூடங்களும் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். 16,000 மாதிரிகள் சேகரிப்பு மையங்கள் செயல்படுவதாகவும், தினசரி சுமார் 60,000 பேருக்கு சோதனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் தினசரி 1 லட்சம் என்ற அளவில் சோதனைத் திறனை உயர்த்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.