அர்ச்சுணா… அர்ச்சுணா… கொள்ளையடிக்கும் அர்ச்சுணா!

Filed under: அரசியல்,தமிழகம் |

Arjunanஇராமேஸ்வரத்தில் அ.தி.மு.க. சேர்மன் அர்சுணனால் பாதிக்கப்பட்டு உயிருக்கு பயந்து நடுங்கும் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான ராமசாமி மற்றும் அவரது மனைவி ஆர்.கஸ்தூரி (அ.தி.மு.க. மகளிர்அணி நகர செயலாளர்) இருவரும் வாழ்வையே தொலைத்துவிட்டு, கதறுவதாக தகவல்கள் வர விசாரித்தோம்.
மேற்படி இராமசாமி ராமேஸ்வரத்தில் (ஸ்ரீராமஜெயம் கம்பெனி) விசைப்படகு வைத்து நல்ல நிலையில் இருந்துள்ளார். இவர் 1988 ஆம் வருடம் சந்தானம் என்பவரிடம் இரண்டு 2.42 சென்டிற்கு கிரைய ஒப்பந்தம் போட்டுள்ளார். அந்த நிலத்திற்கான பணத்தை முழுவதும் கொடுத்ததற்கான ஒப்பந்த கிரைய பத்திரத்தை காண்பித்து கண்ணீர் மல்க கூறியதாவது….
“சந்தானம் எனக்கு கிரையம் செய்து தருவதாக சொன்னதால் பணம் முழுவதையும் கொடுத்துவிட்டேன். இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு இந்த நிலத்தை அர்ச்சுணன் அந்த இடத்தை (29/2007) அவரது பெயருக்கே கிரையம் செய்துவிட்டார்.
நானும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு என என் மனைவி கஸ்தூரியோடு சென்று எத்தனையோ புகார் கொடுத்துவிட்டோம். ஆனால் பதில் எதுவும் இல்லை. காவல் நிலையம் அழைப்பார்கள். நாங்கள் செல்வோம் யாரிடமிருந்தோ போன் வரும். உடனே அர்ச்சுணனுக்கு சாதகமாக பேசி அனுப்பிவிடுவார்கள்.
நான் 300 தென்னை மரத்தோடு, பனைமரம், பூவரசமரம் வளர்த்து வந்த அந்த இடத்திற்கு, அருகில் அர்ச்சுணன் இடம் உள்ளது. இந்நிலையில் அவர் நகர செயலாளராகவும் இருந்த காரணத்தால், இவர் 29&3&2008 அன்று குணசேகரன் என்பவர் இவரது தவறை தட்டிக்கேட்டார். அதனால் குணசேகரனை தி.மு.க. மதுரை ரவுடிகளோடு சேர்ந்து அடித்து துவம்சம் செய்துவிட்டார். இந்த நிகழ்வு வார இதழ்களிலும் வந்தது.
அதேபோல இவர் சேர்மன் ஆனதும் 15.8.2013 அன்று அனைத்து நாளிதழ்களிலும் வெளியிட்ட நகராட்சி இளநிலை உதவியாளர்கள் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்தார். உடனே தில்லாலங்கடி சேர்மன் அந்த சமூக ஆர்வலரை அழைத்து அவருக்கு பதவி கொடுத்ததும் அந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார். இப்படி யாரையும் கவிழ்க்கும் கில்லாடி சேர்மனை எதிர்த்து, இந்த இளநிலை உதவியாளர் பணி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முறைகேடு செய்ததை மீண்டும் வழக்கு தொடர மற்றொரு சமூக ஆர்வலர் தயாராகி விட்டார். இது பொதுநல வழக்காக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது என ர.ர.க்கள் மத்தியில் ஹாட்டாபிக்காக உள்ளது.
பத்திரிகையாளர்கள் இவரைப்பற்றி எழுதினால், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்புவது இவரது ஸ்டைலாம்.
மேலும் சேர்மன் தில்லாலங்கடி டுபாக்கூர் அர்ச்சுணன் மயான நிலத்தை (மூன்றரை ஏக்கர்) ஆக்ரமித்துவிட்டார் என்ற செய்தியும் இராமேஸ்வரம் பொது மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவ்வளவு டுபாக்கூர் வேலைகளை செய்யும் சேர்மனுக்கு இனிசியலை மாற்றி சேர்மன் சீட்டு வாங்கித்தந்ததாகவும் பேச்சு அடிபடுகிறது. கடந்த 22.9.15 அன்று கூட பாதிக்கப்பட்ட ராமசாமி புகாரை விசாரித்து ஆய்வாளரிடம் கிரையம் பெற்றுவிட்டேன் என்ற பத்திரத்தை காண்பித்தால் போலீஸ் கப்சிப்!
சேர்மன் அர்ச்சுணன் எப்போதும் சிமெண்ட் ரோடு மட்டும்தான் போடுவாராம். அதிலும் 50 சதவீதம் லாபம் என்ற கால்குலேஷனோடுதான் வேலை செய்வார். இவர் தி.மு.க. ஆட்சியில் போட்ட தார் ரோட்டை அப்போதைய தி.மு.க. மூத்த அமைச்சர் தோண்டி ஆய்வு செய்ய, பிறகு கவனிப்பால் கைவிடப்பட்டதாம். இவரது அல்லக்கை அர்ச்சுணன் வீட்டிற்கு மட்டும் பல லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைத்து சாதனை புரிந்துள்ளாராம். டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் அன்னகர்ணன் வேலைக்கு செல்லாமல், கையெழுத்து மட்டும் எப்படி போடுகிறார்? என சக ஊழியர்களும் புலம்புவதை நாம் காணமுடிகிறது. சேர்மன் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் (பினாமி கருமலையான், கே.பி. முனியசாமி) நகராட்சி வண்டியில்தான் தண்ணீர், செங்கல், இடம் மாற்றம் செய்ய, தன் தோப்பிற்குள் வேலை செய்ய ஆட்கள் என நகராட்சி சம்பந்தப்பட்டவைகளில் தான் வேலை நடக்குதாம்.
இவர் சேர்மன் ஆன பின்பு வாங்கிய சொத்துக்கள், டாக்மெண்ட் நம்பர் 1625/12, 1451/13, 1985/13, 1331/14, 747/11 தெரிந்த சொத்துக்கள் என ர.ர.க்கள் அனைவரின் கையிலும் உள்ளது. இதேபோல் பல சொத்துப்பட்டியல்கள், ஒரு சொத்தை விற்று வாங்குவதுபோல் டிராமா போடுகிறாராம். கார்டனுக்கு செய்திகள் பறந்தவண்ணம் உள்ளது.
இப்படி குண்டுமாத்து குழிமாத்து செய்யும் தில்லாலங்கடி சேர்மனுக்கு பின்னால் ராஜா பெயரைக் கொண்டவர் இருக்கிறாராம். விஜிலென்ஸ் பார்வையில் படும்முன்னே தலைமை நடவடிக்கை எடுத்தால், பல கோடி சொத்துக்கள் வரும் என ர.ர.க்கள் கூறி வருகின்றனர். இவரது செயல்பாட்டால் கடந்த எம்.பி. தேர்தலில் பி.ஜே.பி. 1500 வாக்குகள் அதிகம் பெற்றது என குமுறுகின்றனர். உளவுத்துறை தற்போது தகவல்களை திரட்டி வருவதாக செய்திகள் கசிகின்றன. எது எப்படியோ தேங்காய் முற்றினால் தெருவுக்கு வந்துதானே ஆகனும்.

இதுகுறித்து நாம் அன்வர்ராஜா எம்.பி. அவர்களிடம் மயானம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறதே உண்மையா எனக் கேட்டோம். எனக்கு தெரிந்து உண்மை இல்லை. டாக்குமெண்டஸ் சரியாக காட்டினால் பாருங்கள். தேர்தல் வரும்போது ஒவ்வொரு முறையும் இப்படி சொல்வார்கள் என்றார்.
எது எப்படியோ தலைமையிலும், அம்மாவின் பார்வையிலும் யாரும் நீண்ட நாள் தப்பியதில்லை. உண்மையை சொல்ல நாம் ஒருபோதும் தயங்கமாட்டோம்.