ஆய்வாளர் பணியிடை நீக்கம்: தஞ்சை டிஐஜி அதிரடி!

Filed under: தமிழகம் |

மயிலாடுதுறை : சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஸ்ரீபிரியா. இவர், சீர்காழியில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இவரின் கணவர் சோமசுந்தரம். இவர் நாகை மாவட்டத்தில் காவலராக பணியில் இருந்தபோது, புகாரின் அடிப்படையில் நிரந்தர பணிநீக்கம் பெற்று, நீதிமன்ற உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்டம் ஏரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்து, இன்று வரை மருத்துவ விடுப்பில் உள்ளார்.

ஆய்வாளர் ஸ்ரீபிரியா

இந்நிலையில் மேற்படி ஆய்வாளர், சீருடையில் தனது சொந்த காரில் கணவருடன் சென்று சீர்காழி தென் பாதியில் உள்ள ஸ்டார் மளிகை, காவேரி டிபார்மண்டல் ஸ்டோர் ஆகிய கடைகளை மூட சொல்லியுள்ளார். மேலும், திருவெண்காடு காவல் சரகத்தில் மங்கை மடம் சென்று,  கல்யாணி மெடிக்கல் கடையில் இருந்த உரிமையாளர் மூர்த்தியிடம் மிரட்டியும், கடையில் வேலை பார்த்த இரு பெண்களை போட்டோ எடுத்து மிரட்டி, ரூ.2000 பணம் பெற்றுக்கொண்டு, பக்கத்தில் இருந்த இந்தியன் மளிகை, உதயம் மளிகை, குமார் பூக்கடை இடங்களிலும் மிரட்டி பணம் பெற்றுள்ளார். இந்த சம்பவம் ஊடகங்களில் வெளிவர, தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

– நாகை மாவட்ட செய்தியாளர் மூர்த்தி