இசையமைப்பாளர் சாம் சி எஸ்க்கு பாலிவுட்டிலிருந்து படவாய்ப்புகள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு, புஷ்கர் & -காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை ஹ்ருத்திக் ரோஷனும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிப் அலிகானும் ஏற்று நடித்துள்ளனர். தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழில் இசையமைத்த சாம் சி எஸ் இப்படத்துக்கும் இசையமைத்துள்ளார். திரைப்படம் செப். 30ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், சமீபத்தில் டிரையிலர் வெளியானது. டிரையிலரின் பின்னணி இசை வெகுவாகக் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து பாலிவுட்டிலிருந்து பட வாய்ப்புகள் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் இசையமைத்த, “ராக்கெட்ரி” திரைப்படம் பரவலாக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.