இயக்குனர் பாரதிராஜாவை நலம் விசாரித்த ஸ்டாலின்!

Filed under: சினிமா,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குநர் மற்றும் நடிகருமான பாரதிராஜா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பாரதிராஜாவின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிப்பதாக கூறப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற தவறான தகவல்களை தயவுசெய்து பரப்ப வேண்டாம் என்றும் எங்களுடைய சொந்த பணத்தில் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் விளக்கமளித்தார்.

மேலும் அவர் கூறும் போது, “பாரதிராஜா தற்போது உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆகி விட்டார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவருடைய மருத்துவச் செலவை முழுக்க முழுக்க எங்கள் குடும்பம் செய்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அவர் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக இருக்கிறார்.” என்று மனோஜ் பாரதி கூறியுள்ளார்.
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வீடு திரும்பிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். இச்சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர்.