ஊராட்சி தலைவர் அடித்துக் கொலை!

Filed under: தமிழகம் |

நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஊராட்சி தலைவர் நரசிம்மமூர்த்தியை அடித்துக் கொலை செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தாரவேந்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பிபி பாளையத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி இருந்து வந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார். அவர் நேற்று இரவு (ஆக. 2) அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, போலீசார் தரப்பில், “நேற்று இரவு நரசிம்மமூர்த்தி தளியிலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தனது ஊரான பிபி பாளையம் அருகே அவர் வந்தபோது அவரைப் பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் கட்டையால் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் நரசிம்மமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தளி காவல்துறை ஆய்வாளர் (பொறுப்பு) சம்பூர்ணம் தலைமையிலான காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட நரசிம்மமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்” என தெரிவித்தனர். மேலும் போலீசார், கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.