ஒரு கலைஞனின் கையில் தமிழகம் சந்தோஷம்தான்!

Filed under: சினிமா |

நடிகர் ஆனந்தராஜ் “கோப்ரா” ஆடியோ வெளியீட்டு விழாவில், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலிதாவுக்கு பிறகு திரைத்துறையிலிருந்து தமிழகத்தை ஆளப்போவது உதயநிதி தான், ஒரு கலைஞனின் கையில் தமிழகம் இருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே என்று பேசியுள்ளார்.

“இமைக்கா நொடிகள்” மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான அஜய் ஞானமுத்து தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் “கோப்ரா” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆக்ஷன், திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் நடிகர் விக்ரமின் 58 வது திரைப்படமாகும். படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மிருனாளினி ரவி, மியா ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். “கோப்ரா” பட புரமோசனுக்காக படக்குழு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆனந்தராஜ், “உதயநிதியை பார்த்தவுடன் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. அவரைப் பார்த்தவுடன் அனைவரும் ஒரு வேண்டுகோள் வைப்பார்கள். நானும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இண்டர்வியூ ஒன்றில் பேசிய உதயநிதி இதுதான் எனது கடைசி படம் எனக் கூறினார். அப்படி இருக்கக் கூடாது கேட்டவுடன் எங்களுக்கெல்லாம் பகீர் என ஆகிவிட்டது. தயவுசெய்து அந்த வார்த்தைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அவர் இன்னும் சில படங்களில் நடிக்க வேண்டும் நானும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும். அடுத்து நீங்கள் எங்கு செல்வீர்கள் என்பது தெரியும் அது எங்களுக்கு பெருமை தான். நாங்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்கு இருப்பவர்கள் கேட்பார்ர்கள் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான் தமிழ்நாட்டை ஆள முடியுமா என்று அப்போதெல்லாம் எனக்கு கர்வம் வந்துவிடும். அண்ணாவுக்கு பிறகு, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதாவுக்கு பிறகு திரைத்துறையை கலைஞன் தான் ஆளவேண்டும் என்றால் அந்த பெருமை உதயநிதி உங்களுக்கு வந்து சேரும். ஒரு கலைஞர் தமிழகத்தை ஆளுகிற என்கிற பெருமை ஒரு கலைஞனாக எனக்கு கண்டிப்பாக இருக்கும்ஸ” என்று பேசினார். இவர் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.