நெற்றிக்கண் செய்தி எதிரொலி !
களத்தில் குதித்த திருப்பத்தூர் மாவட்ட புதிய எஸ்.பி.சக்ரவர்த்தி
கடந்த 2.7.2021 நமது நவீன நெற்றிக்கண் வார இதழில், ” திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு காத்திருக்கும் சவால்கள் ” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.
அந்தக் கட்டுரையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறாக ஓடும் கள்ள சாராயம், மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் போன்றவைகளை புதிய எஸ்.பி.யான சிபிசக்கரவர்த்தி தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தோம். அந்த இதழ் கடைகளுக்கு வந்த அன்றே களத்தில் குதித்தார் திருப்பத்தூர் மாவட்ட புதிய எஸ்.பி.யான சிபிசக்கரவர்த்தி.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.தலைமையில் ஒரு ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 30 -க்கும் மேற்பட்ட போலீசாருடன் ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள மாத கடப்பா மற்றும் பாரதி நகர் பகுதிகளில் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். ட்ரோன் காமிராக்களை பறக்கவிட்டு கள்ள சாராய ஊறல்களையும் பேரல்களையும் கண்டுபிடித்தனர்.
இந்த கள்ளச்சாராய வேட்டையின் போது, 2000 லிட்டர் ஊறல் , 500 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது. இந்த கள்ள சாராய வேட்டையின் போது மலைமேல் சாராயம் காய்ச்ச வெல்லம் சுமை தூக்கி கொண்டு செல்லும் ஏழு கழுதைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஆம்பூர் அருகே சோமலாபுரம் ஊராட்சி, வீரராகவபுரம் பகுதி பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட தி.மு.க.பிரமுகர் விமல் என்பவரை கைது செய்து வழக்கு பதிய உத்தரவிட்ட எஸ்.பி., மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லோடு சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
கடந்த 28.6.2021 அன்று ஆலாங்குப்பம் பாலாறு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 மாட்டு வண்டிகளை பிடித்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார் சிபி சக்கரவர்த்தி. புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியின் பணிகள் தொடரட்டும்.