குடியரசு துணைத் தலைவர் புத்த பூர்ணிமா வாழ்த்து!

Filed under: இந்தியா |

புது டெல்லி,மே 06

புத்த பூர்ணிமா திருநாளை  முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “புத்த பிரானின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு  நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

உண்மை, அறம், நேர்மையின் பாதையில் பயணிக்குமாறு மனித குலத்தை ஊக்குவித்தவர் புத்தபிரான். அவரது போதனைகள், ஆன்மீக விழிப்புணர்வின் வாயிலாக மக்களை விடுதலை பெறச் செய்யும் வழியைக் காட்டின. அமைதி, உண்மை, கருணை என்ற அவரின் போதனைகள் உலகை அறிவொளி பெறச் செய்ததோடு, எல்லா காலங்களுக்கும் பொருத்தமாக இருக்கின்றன.

இந்த கொவிட்-19  பெருந்தொற்று காலத்தில், நாம் அனைவரும் அன்பு, சகிப்புத்தன்மை, கருணை ஆகியவற்றை கடைபிடிப்பது அவசியம், வறுமையில் வாடுவோருக்கு உதவுவோம். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில், தம் உயிரைப் பணயம் வைத்து முன் நிலையில் இருப்போருக்கு நன்றி செலுத்துவோம்”, என்று கூறியுள்ளார்.