குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞராவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் !

Filed under: இந்தியா,தமிழகம் |

highcourt_2321324fமூன்று ஆண்டு சட்டப்படிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவம், இன்ஜினீயரிங் போன்ற தொழில் படிப்புகள்போல 5 ஆண்டு சட்டப்படிப்பை மட்டும் வைத்திருக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

இந்திய பார் கவுன்சில் தேர்தலுக்கும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் சட்டப் படிப்பு படிக்கவும், வழக்கறிஞராக பதிவு செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத் தில் எஸ்.எம்.ஆனந்த முருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “குற்றப் பின்னணி உள்ளவர்கள் சட்டத்துறையில் நுழைவதை தடுக்கவும், அப்படிப் பட்டவர்களுக்கு காவல்துறை வழங்கிய ஆட்சேபம் இல்லா சான்றிதழை ரத்து செய்யவும், புதிதாக விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:

சட்டத் தொழில், குற்றவாளி களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடம் அல்ல. சட்டப் படிப்புகள், குற்றச் செயல்களுக்கான கேடயமும் அல்ல. குற்றப் பின்னணி உள்ளவர்கள் சட்டப் படிப்பை வாங்கி, வழக்கறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர் என்பது இந்த நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் ஊடக அறிக்கைகள் மூலம் தெரியவருகிறது. இது, புனிதமான சட்டத் தொழிலின் மதிப்பைக் குறைக்கிறது. இதற்காக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

சென்னையில் அண்மையில் நடந்த சட்டக் கருத்தரங்கில் இந்திய பார் கவுன்சில் தலைவர் பேசும்போது, இந்தியாவில் 30 சதவீதம் போலி வழக்கறிஞர்கள் உள்ளனர் என்று குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், குற்றவாளிகள், குற்றப் பின்னணி, சாதிய பின்னணி, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளவர்கள் சட்டத் தொழிலுக்கு வருவதைத் தடுக்க வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 24ஏ-வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது புதிய பிரிவை கொண்டுவர வேண்டும்.

சட்டம் படித்தவர்கள் வழக்கறி ஞராகப் பதிவு செய்ய வரும்போது, அவர்களது சொந்த ஊர் மற்றும் படித்த இடத்தில் காவல்துறை நடத்திய முன்விசாரணை பற்றிய விவரங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என்று மாநில பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்த வேண்டும்.

3 ஆண்டுகள் தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்குகள், திருமணம், குடும்பம் மற்றும் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்கு பார் கவுன்சலில் தற்காலிக பதிவு மட்டும் தரவேண்டும். தன் மீதான வழக்குகளை ரத்து செய்ததற்கான உத்தரவை ஒருவர் தராவிட்டால் அவருக்கு வழங்கப்பட்ட தற்காலிக வழக்கறிஞர் பதிவை ரத்து செய்ய வேண்டும்.

ஜாமீன் பெறக்கூடிய வழக்குகள், திருமணம், குடும்பம், சிவில் வழக்குகள் தவிர இதர குற்றவாளிகளை சட்டப் படிப்பில் சேர்க்கக் கூடாது. குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கூடாது என்று இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும். அதுபோல துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளானோர், பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் வழக்கறிஞராகப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது.

சட்டக் கல்லூரியில் மாணவர் களை சேர்ப்பதற்கு முன்பு அவர் களைப் பற்றி போலீஸார் நடத்திய முன்விசாரணை சான்றிதழை கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும் என்று அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும். குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் அவர்களையும் சட்டக் கல்லூரியில் சேர்க்கக்கூடாது.

சட்டப்படிப்பு முடித்து வழக்கறிஞராக பதிவு செய்யும் முன்பு, சட்டப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 1999-ம் ஆண்டு உத்தரவிட்டது. 16 ஆண்டுகள் ஆகியும் இந்த பரிந்துரை பரிசீலிக்கப்படவில்லை. இந்த பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.

வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் பார் கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டு வரும் வரை, இந்திய பார் கவுன்சிலின் செயல்பாடுகளை கல்வியாளர்கள், சட்ட நிபுணர்கள், சமூக சேவகர்கள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் மற்றும் காவல்துறை அதி காரிகள், மருத்துவர்கள் ஆகியோர் கொண்ட குழுவிடம் ஒப்படைப்பது பற்றி மத்திய அரசு 6 மாதங்களில் பரிசீலக்க வேண்டும்.

இந்திய பார் கவுன்சிலின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டுடன் முடிவடைகிறது. அடுத்த தேர்தலை இந்திய பார் கவுன்சில் நடத்தக்கூடாது. சட்டத் தொழிலில் 20 ஆண்டுகள் அனுபவம், மூத்த வழக்கறிஞர், குற்றப் பின்னணி இல்லாதிருத்தல் போன்றவை தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியாக நிர்ணயிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் வழக்கறிஞர் கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால், சட்டக் கல் லூரிகளில் மாணவர்கள் எண்ணிக் கையை கணிசமாகக் குறைக்க வேண்டும். சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும்.

இந்திய பார் கவுன்சில், 3 ஆண்டு சட்டப்படிப்பை விரைவில் ரத்து செய்ய வேண்டும். மருத்துவம், இன்ஜினீயரிங் போன்ற தொழில் படிப்புகள்போல 5 ஆண்டுகள் சட்டப்படிப்பை மட்டும் வைத்திருக்க வேண்டும்.

பழமையான வழக்கறிஞர்கள் சங்கங்கள் தவிர, ஒரு நீதிமன்றத்துக்கு ஒரு சங்கம் என்ற அடிப்படையில், கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு வழங்கிய அங்கீகாரத்தை திரும்பப் பெற இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்த வேண்டும்.

வழக்கறிஞர் தொழில் குற்றமயமாகி வருவதை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளன. குற்றப் பின்னணி உள்ளவர்கள், சாதிய அமைப்புகள், தீவிரவாத சிந்தனை உடையவர்கள், ஆள் பலம் கொண்டவர்களின் பிடியில் இருந்து நீதித்துறையை மீட்காவிட்டால், நீதி பரிபாலனத்தை நிர்வகித்து வருவோரை நீதி தேவதை ஒருபோதும் மன்னிக்க மாட்டாள்.

இவ்வாறு நீதிபதி என்.கிருபா கரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு கூடுதல் உத்தரவுக்காக வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.