கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் வெள்ளம்: அமைச்சர் செந்தில்பாலாஜி 4 மணி நேரம் ஆய்வு

Filed under: தமிழகம் |

koyambedu-bus2jpgதீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சுமார் 4 மணி நேரம் ஆய்வு நடத்தினார்.

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து 17-ம் தேதி முதல் 21-ம்தேதி வரை 9,088 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் தலா 501 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ததால், சொந்த ஊருக்கு செல்வோரின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில், நேற்று மதியத்துக்கு மேல் மழை சற்று ஓய்ந்திருந்தது. நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால், நேற்றே ஏராளமானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் கோயம்பேடு புறநகர் மற்றும் ஆம்னி பஸ் நிலையங்கள், பெருங்களத்தூர் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்களின் வசதிக்காக நேற்று மட்டும் 699 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலை 10.45 முதல் மதியம் 2.30 மணி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் அவர் ஆய்வு நடத்தினார். சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நடைமேடைகளுக்கு சென்று பார்வையிட்டார். பயணிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். தற்காலிக பஸ் நிறுத்தும் இடத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

‘‘பயணிகளுக்கு தேவையான விவரங்களை தெளிவாக கூற வேண்டும். ‘யாரையும் தட்டிக் கழிக்கக் கூடாது. எந்த ஊருக்கு எங்கிருந்து பஸ்கள் புறப்படும் என்பதை எடுத்துக் கூறவேண்டும். பயணிகளிடம் யாரும் கண்டிப்புடன் நடந்துகொள்ளக் கூடாது. தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க இருக்க வேண்டும். எந்த ஊருக்கும் பஸ் இல்லை என்ற நிலை இருக்கக் கூடாது. கழிப்பிடங்களை சுகாதாரமான முறையில் வைத்திருக்க வேண்டும்’’ என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் கூறியதாவது:

கோயம்பேடு பஸ் நிலையத்தில் மேலும் 3 தற்காலிக நடைமேடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நடைமேடை 1 மற்றும் 2-ல் இருந்து விழுப்புரம், காஞ்சிபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது. 7, 8, 9-வது நடைமேடைகளில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. 3, 4, 5, 6-வது நடைமேடைகளில் நீண்ட தூரம் செல்லும் முன்பதிவு செய்த பயணிகளுக்கான பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

பஸ்களை நிறுத்தி வைக்க வசதியாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தற்காலிக பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. எல்லா பஸ்களும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்றவாறு இயக்கப்படும்.

போக்குவரத்து அலுவலர்களிடையே தகவல்களை பரிமாறிக் கொள்ள வசதியாக 60 வாக்கி-டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மொத்தம் 699 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் 1,400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நாளை 1,652 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆன்லைனில் 1.80 லட்சம் பேர் முன்பதிவு

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புவதற்காக அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் மட்டும் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 1.80 லட்சம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதுதவிர, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை டிக்கெட் வாங்கிச் செல்கின்றனர் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.