கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன்

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை  : கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியிலிருக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவருவது மிகுந்த கவலை அளிக்கிறது. தலைநகர் சென்னையில் பணிபுரியும் மருத்துவர்கள் தொடங்கி கிராமப்புற செவிலியர்கள் வரை வித்தியாசமின்றி இந்தத் தொற்றுக்கு ஆளாகும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசு கவனித்து, அதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உடைகள் போதுமான அளவுக்கு இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் பலமுறை சொன்னார். ஆனால் சென்னை தொடங்கி குமரி வரை அனைத்து பரிசோதனை மற்றும் சிகிச்சை மையப் பணியாளர்கள் அனைவருக்கும் போய் சேரும் வகையில் அவை பகிர்ந்து அளிக்கப்பட்டனவா என்பது சந்தேகமாக இருக்கிறது. இந்த மருத்துவ பாதுகாப்பு உடைகள் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே அணியத் தகுதியானது என்ற உண்மை ஒரு புறம் இருக்க, சுமார் பத்து முதல் பன்னிரெண்டு மணிநேரம் தொடர்ச்சியாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஒரு உடை மட்டுமே வழங்கப்படுவதாக தகவல் வருகிறது. இயற்கை உபாதைகளுக்காகவோ, உரிய நேரத்தில் உணவிற்காகவோ இந்த உடையைக் களைய நேரிடும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த புதிய உடை வழங்கப்படுவதில்லை. இதனாலேயே பலரும் உணவு உண்பதையும் இயற்கை உபாதைகளை கழிக்கச் செல்வதையும் தவிர்ப்பதாக வரும் தகவல்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. இவை உண்மையாக இருந்தால் இதற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து கொரோனா பெருந்தொற்று என்னும் ஆபத்து நிறைந்த நோயிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் உள்ள மருத்துவப் பணியாளர்களின் உடல் நலத்தைப் பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த  வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இதுதவிர, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யும் இடத்தில் மக்கள் நடத்தும் போராட்டங்கள் நம் மனதை கலங்க வைக்கின்றன. சென்னையில் மரணமடைந்த ஆந்திர மாநில மருத்துவரின் உடலை அடக்கம் செய்தபோது, அதுபற்றிய புரிதல் இல்லாமல், இங்கே அடக்கம் செய்யக்கூடாது என்று  மக்கள் போராட்டம் நடத்திய போதே அரசு அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாததால், டெங்கு காய்ச்சலால் மரணமடைந்த சிறுமுகையைச் சேர்ந்த மருத்துவரின் உடல் அடக்கத்தையும் அப்பகுதி மக்கள் எதிர்த்துப் போராடும் நிலையை இந்த அரசு ஏற்படுத்தியது.

நேற்று சென்னையில் மரணமடைந்த மருத்துவர் சைமனின் உடல் அடக்கத்தின் போதும் இதேபோன்று மக்கள் போராடியதைப் பார்த்தால் மக்களுக்கும் இன்னும் புரிதல் ஏற்படவில்லை. அரசும் அதைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்பது புரிகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சொந்த உறவுகளே நெருங்க அச்சப்படும் சூழலில், தங்களது உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு மரணத்தைத் தழுவும் மருத்துவர்களின் உடலை இப்படி அவமதிப்பதை சிறிதும் சகித்துக்கொள்ள முடியாது.

கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவர்கள் மட்டுமல்ல… இப்படி போராடும் மக்களில் ஒருவர் கொரோனாவால் மரணித்தாலும் அவர்களது உடலை அடக்கம் செய்ய உரிய வழிமுறைகள் இருப்பதையும்; அதன்படிதான் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன என்பதையும், சந்தேகம் மற்றும் பீதியால் போராடும் மனநிலைக்கு வரும் மக்களுக்குப் புரிய வைக்கும் பணியை தமிழக அரசு  இனியும் தாமதிக்காமல் உடனடியாக தொடங்க வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்களும் தங்களின் பொறுப்பு மற்றும் கடமையை உணர்ந்து மனித நேயத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என டிடிவி தினகரன்