சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு!

Filed under: இந்தியா |

புது டெல்லி,மே 02

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை இன்னும் செம்மையானதாக ஆக்க உதவும் திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று விரிவான ஆய்வு நடத்தினார். மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், விமான நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்கும் வகையிலும் ராணுவ விவகாரங்கள் துறையின் ஒத்துழைப்புடன், பயண நேரத்தை செம்மையாகக் குறைப்பது, இந்தியாவின் வான்வழிப் பகுதியை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்வது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Photo Courtesy PIB

கூடுதல் வருமானம் ஈட்டவும், விமான நிலையங்களில் செயல் திறனை அதிகரிக்கவும், மேலும் 6 விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் பங்களிப்பு (PPP) அடிப்படையில் ஒப்படைப்பதற்கான பணிகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விரைவுபடுத்த வேண்டும் என்றும், இதற்கான ஒப்பந்தப்புள்ளிப் பணிகளை மூன்று மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் e-DGCA திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் அலுவலகச் செயல்பாடுகளில் அதிக வெளிப்படைத்தன்மையை இது உருவாக்கும் என்றும், பல்வேறு உரிமங்கள் / அனுமதிகள் பெறுவதற்கான அவகாசம் குறைக்கப்படுவதால், தொடர்புடையவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து சீர்திருத்த முன்முயற்சிகளும், குறித்த காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், சிவில் விமானப் போக்குவரத்து, நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.