கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில், மக்கள் தொடர்பு அலுவலராக நல்லதம்பி என்பவர் இருந்து வருகிறார். இவரது பதவி காலத்தில் இப்படி ஒரு அசிங்கமான செயல்களும், மோசடி புகார்களும், செய்தித் துறை ஊழியர்களை போலீஸ் கைது… என்று பரபரப்பான தகவல்களால் இன்று கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊழியர்கள் வெட்கி தலைகுனிந்து காணப்படுகின்றனர்.
ஆம், கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பிரபு என்பவர் கண்காணிப்பாளராகவும் சுரேஷ் பாபு என்பவர் அலுவலக ஜீப் டிரைவராகவும் பணிபுரிந்து வந்தனர். தன்னை சந்திக்க வரும் நபர்களிடமும் பொதுமக்களிடமும் பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணம் பெற்றனர்.பணம் கொடுத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய பில்டிங்கில் இரண்டாவது தளத்தில் பணம் கொடுத்தவர்களை நேரில் வரவழைத்து நேர்காணல் நடத்தியுள்ளனர் இந்த போலி டிராமாவில் பிரபு என்பவர் செய்தித்துறையில் பெரிய அதிகாரியாகவும் சுரேஷ்பாபு அவரது நேர்முக உதவியாளராக ஆகவும் நேர்காணலில் நடித்து பணம் கொடுத்தவர்களுக்கு போலியான நியமன உத்தரவுகளை வழங்கியுள்ளனர். போலி உத்தரவுகளை எடுத்துக்கொண்டு வேலைக்கு சேர சென்ற போது தான் அது போலி உத்தரவு என்று பணம் கொடுத்தவர்களுக்கு தெரியவந்தது. இதனால், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு செருப்பை கழட்டி அடிக்க பாய்ந்த போது பிரபுவும், சுரேஷ்பாபு ஆகிய இருவரும் தர்மஅடிக்கு பயந்து செய்தித்துறை அலுவலகத்தில் உள்ள கழிவறைக்குள் ஓடிச் சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொண்டனர்.
அதற்குள் சில ஊழியர்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் அடிக்கப் பாய்ந்த நபர்களிடம் சமாதானப் பேச்சு பேசினார்கள். அப்போதைக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் பணம் கொடுத்து விடுவதாக இருவரும் சொல்ல பணம் கொடுத்தவர்களும் பணம் கிடைத்தால் போதும் என்று திரும்பிச் சென்றனர். இன்று போய் நாளை வா என்ற கணக்கில் பிரபுவும் சுரேஷ்பாபு ஆகிய இருவரும் மாதக்கணக்கில் இழுத்தடித்துக் கொண்டு வந்தனர். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாட்களில் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகச் சென்று புகார் மனு கொடுத்தனர். இந்த புகார் மனு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கிணற்றில் போட்ட கல்லாக அந்த புகார் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. பணம்கொடுத்து ஏமாந்தவர்கள் கோவையில் நியாயம் கிடைக்காது என்று சுதாரித்துக் கொண்டு சென்னை செய்தித் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பினார்கள்.
இதன் விளைவாக சென்னை செய்தித் துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து இணை இயக்குனர் அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமித்து கோவையில் நடைபெற்ற மோசடி புகார் மனுக்களை விசாரித்தனர். இந்த விசாரணையில் பணம் கொடுத்து ஏமாந்த நபர்களையும் நேரில் வரவழைத்து கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் செய்தித்துறை ஊழியர்களான கண்காணிப்பாளர் பிரபு, ஜீப் டிரைவரான சுரேஷ்பாபு ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது உண்மை என தெரிய வந்தது. உடனே பிரபு என்பவரை சென்னைக்கும் சுரேஷ்பாபு என்பவரை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் இடமாறுதல் செய்யப்பட்டனர். ஒரு சில மாதங்கள் உருண்டோடின. போலி நியமன உத்தரவு பொதுமக்களிடம் மோசடி செய்த சுரேஷ்பாபு, பிரபு ஆகிய இருவர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசில் செய்தித்துறை தரப்பிலிருந்து புகார் செய்யப்பட்டது.
இப்புகாரின் அடிப்படையில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் துரிதமாக விசாரணை செய்து போலி நியமன உத்தரவு மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட கண்காணிப்பாளர் பிரபு , ஜீப் டிரைவர் சுரேஷ்பாபு ஆகியோரை நேற்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்றாலும், கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் நடைபெற்ற சம்பவங்களை விரிவாக எழுதுங்களேன் என்று செய்தித்துறை வட்டாரங்கள் நமக்கு தகவல் தரவே , நாம் விசாரணையில் இறங்கி விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல் நமக்கு கிடைத்தன அதன் விவரம் இதோ…கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் தற்போதைய பி.ஆர்.ஓ. நல்லதம்பி வருவதற்குமுன் பி.ஆர். ஓ. வாக இருந்தவர் பாண்டி இவரது பதவி காலத்தில் கண்காணிப்பாளர் பிரபுவும் ஜீப் டிரைவர் சுரேஷ் பாபுவும் சேர்ந்துகொண்டு அலுவலகத்தில் பல மாயாஜால வித்தைகளை காண்பித்தார்கள். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அரசு அடையாள அட்டையை பணம் வாங்கிக் கொண்டு பாண்டியிடம் சிபாரிசு செய்து பல போலி நபர்களுக்கு பத்திரிக்கையாளர் என்று அடையாள அட்டை வழங்கினார்கள்.
அத்துடன் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை விலை வீட்டுமனை பட்டாவில் இந்த போலி நபர்களையும் சேர்த்து பட்டியலில் இடம் பெறச் செய்தார்கள். இதனால் உண்மையான பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுவதற்கு தயாராகிக் கொண்டு வருகிறார்களாம். பாண்டிக்கு பின்பு வந்த நல்லதம்பி பி.ஆர்.ஓ .செய்தி மக்கள் தொடர்புத் துறையில் நடைபெற்ற தவறுகளை பல பத்திரிக்கையாளர்கள் அவரிடம் எடுத்துக் கூறியும் அவர் தெரிந்தும் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டாராம். அத்துடன் பாண்டி பார்முலா படி நடந்துகொண்ட நல்லதம்பி அந்த போலி நபர்களுக்கு கொரோனா நிவாரண தொகை 3 ஆயிரத்தை போலி நபர்களுக்கு கொடுத்து உற்சாகப்படுத்தினார் என்று சில பத்திரிகையாளர்கள் நம்மிடத்தில் மேற்படி தகவலை கூறுகிறார்கள். எத்தனையோ செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் கோவையில் பணிபுரிந்து விட்டு சென்றாலும் தற்போதைய பி.ஆர்.ஓ நல்ல தம்பியின் பதவி காலத்தில் இப்படி ஒரு அவமான செயல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது.
அத்துடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கண்காணிப்பாளர் பிரபுவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டதாக கூறப்படும் செய்தித்துறை பெண் பிரமுகர் ஒருவரையும் விசாரணை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் செய்தித் துறை ஊழியர்கள். கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் நல்ல தம்பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்து அவர்மீது விசாரணைக் குழு அமைத்து விசாரணை செய்தால் நல்லதம்பியால் யார் யாருக்கு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் போஸ்டிங் போடப்பட்டது. கோவையில் நல்லதம்பி வாங்கிய சொத்துக்கள் விபரம் என்ன என்பதையும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை விலை வீட்டுமனை பட்டாவில் பயனாளிகள் 138 நபர்களுக்கு மேல் எத்தனை பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது என்ற விபரத்தையும் விசாரணைக்குழு விசாரித்தால் பல உண்மைகள் வெளியாகும் இதை சென்னை செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் சங்கர் நேர்மையான விசாரணைக்கு உத்தர விடுவாரா.? என்ற கேள்வி கோவை மாவட்ட செய்தி துறையில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.