சோறு முக்கியமா.. சங்கம் முக்கியமா.. ராகுல் காந்தி..ஸ்டாலினை .. நட்டா முன்பு வெளுத்து வாங்கிய குஷ்பு

Filed under: அரசியல்,தமிழகம் |

மதுரை: சோறு முக்கியமா,.. சங்கம் முக்கியமா என்று கேள்வி கேட்ட குஷ்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் முக ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலை மதுரை பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேசும் போது ராகுல்காந்தியை தலைவரே இல்லை என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு நேற்று அக்கட்சியின் தேசிய தலைவர ஜேபி நட்டா கலந்து கொண்ட மதுரை நிகழ்ச்சியில் பேசுகையில், மக்கள் மத்தியில் பாஜக மீது நம்பிக்கை வந்துள்ளது. பாஜகவை பார்த்த உடன், பிரதமர் மோடியை பார்த்த உடன் கட்சிகளுக்கு வரும் பயம் இருக்கிறது பாருங்கள். அதுதான் பாஜகவின் முதல் வெற்றி.

நமக்கு சோறு முக்கியமா.. சங்கம் முக்கியமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். நமக்கு சங்கம் தான் முக்கியம் வேலையை பார்க்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் டெல்லியில் இருந்து ஒரு தலைவர் வருகிறார் பாருங்கள்.. சோறு முக்கியமா சங்கம் முக்கியமா என்றால், சோறு தான் முக்கியம் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
தைரியம் உள்ளதா

பாஜக தமிழகத்தில் என்ன சாதித்தது என்று நீங்கள் கேட்கிறீர்கள். நான் கேட்கிறேன். காங்கிரஸ் 60 வருட ஆட்சியில் இந்தியாவில் என்ன சாதித்து விட்டீங்க.. மதரீதியான கட்சி என்று எங்களை விமர்சிக்கும் நீங்கள். சாதி ரீதியான கட்சி நடத்துகிறீர்கள் ஸ்டாலின் அவர்களே.. வேறு மாவட்டத்தில் இருந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுங்க.. அதற்கான தைரியம் உங்களுக்கு கிடையாது.

உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் முக ஸ்டாலின், ராகுல் காந்திக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்கிறார் என்று பாருங்கள். ராகுல் காந்தி பொங்கலுக்காக இங்கு வந்தாரு, ஜல்லிக்கட்டு பார்க்க போனாரு. ஸ்டாலின் அவர்கள் அவருடன் உட்காரவில்லை.கவுரவக்குறைச்சலாக இருக்கும் என்று நினைத்து உதயநிதி ஸ்டாலினை அனுப்பி இருக்கிறார். கூட்டணி கட்சி தலைவரே உங்களை(ராகுலை) மதிக்கவில்லை. இவ்வளவு தான் நீங்க இருக்கீங்க..

ராகுல் காந்தி

ராகுல் காந்தி இங்கு வந்து பார்த்த பிறகு தான் ஜல்லிக்கட்டின் அருமை புரிவதாக சொன்னார். ஆனால் ஜல்லிக்கட்டு இருக்கக்கூடாது, அதற்கு எதிரான விஷயங்களை செய்ததே உங்கள் கட்சிதான். இத்தனை வருடங்களாக என்ன செய்தீர்கள். அப்போது தூங்கி கொண்டிருந்தீர்களா.. ஜல்லிக்கட்டுக்கு எதிராக சட்டத்தை கொண்டு வந்தாங்க. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த உடன் உங்கள் ஆட்கள் தானே பாராட்டி எழுதினார்கள்.

தமிழை சரியாக பேசுங்கள்

திருக்குறள் படித்துவிட்டு வந்து பேசுகிறேன் என்று ராகுல் காந்தி சொல்கிறார். ஆனால் 1330 திருக்குறள் உள்ளது. ராகுல் காந்தி அவர்களே அதை உங்களால் நிச்சயம் படிக்க முடியாது. நீங்கள் படிக்க வேண்டாம். ஒரு சின்ன கோரிக்கை மட்டும் வைக்கிறேன். ராகுல் வந்த உடன் டமில் பிப்பிள் என்று சொல்கிறார். அது டமில் இல்லை தமிழ் என்று சொல்லுங்கள். தமிழ், தமிழ்நாடு என்று சொல்லுங்கள். அப்போது உங்களை தலைவராக ஏற்கிறோம். உண்மையில் ராகுல் காந்தி ஒரு தலைவரே கிடையாது” என்று குஷ்பு காரசாரமாக பேசினார்.