தமிழகம் முழுவதும் தொடரும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா…?

Filed under: தமிழகம் |

வால்மீகி

ராமநாதபுரம் : மணல் அள்ள நீதிமன்றங்கள் எத்தனை தடை விதித்தாலும் எங்களுக்கு கவலையே இல்லை. நாங்கள் எங்கள் திருட்டு தொழிலை செய்து கொண்டு தான் இருப்போம் என்பதுபோல், தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு தான் வருகிறார்கள் மணல் கொள்ளையர்கள். மணல் கொள்ளைக்கு கடுமையான சட்டங்கள் இல்லாததால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. நாம் சில மாவட்டங்களில் இது சம்பந்தமாக விசாரணையில் இறங்கினோம்.

மணல் கொள்ளை நடந்த இடம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் மணல் கொள்ளை ஜெக ஜோதியாய் நடைபெற்று கொண்டு இருந்திருக்கிறது. திருவரங்கம் ஊராட்சி தலைவராக உள்ள அன்னபூரணம் என்பவரின் மகன் பொன்னுரங்கம் இங்கு நடக்கும் மணல் கொள்ளை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இது மணல் கடத்தல்காரர்களுக்கு தெரியவர, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வந்த பொன்னிவளவனை ஆறு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து வெட்டி கொலை செய்து விட்டனர்.
அதே ஊரை சேர்ந்த மணல் கடத்தல் காரர்களான முத்து, சரவணன், தமிழரசன், விக்னேஸ்வரன், நிதிஷ்குமார், ஆகியோர் மீது கீழத்தூவல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் மணல் கடத்தல் வேறு பகுதியில் நடக்கத்தான் செய்கிறது. அடுத்ததாக, கடலாடி அருகே ஆப்பனூர் முதல் கடலும் ஆறும் சங்கமிக்கும் மூக்கையூர் வரையுள்ள மலட்டாற்று ஆற்றுப்படுகையிலும் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறத்தான் செய்கிறது.

மணல் கொள்ளை நடந்த இடம்

கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு அங்குள்ள போலீசார் ஆதரவுடன் தான் நடந்து வருகிறதாம் யார் புகார் கொடுத்தாலும் நடவடிக்கையே எடுக்க மாட்டோம் என்பது கீழக்கரையில் உள்ள சில காக்கிகள் எழுதப்படாத சட்டமாகவே வைத்திருக்கிறார்களாம்.
சிவகங்கை மாவட்டத்திலோ காரைக்குடி அருகே நாகவயல் பகுதிகளில் தனியார் கிராவல் மண் குவாரி கடந்த ஆறு மாதமாக செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் மூன்று அடி ஆழத்திற்கு மட்டுமே மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் விதிகளை மீறி அந்த மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு, பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை வைத்துக்கொண்டு, 20 அடி ஆழம் வரை அரசு விதிகளை மீறி அள்ளியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் மெகா பள்ளம் ஏற்பட்டதோடு நீர் வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பள்ளத்தில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து செயல்பட்டு வரும் கிராவல் மண் குவாரிக்கு தடை விதிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தாலும் கேட்கத்தான் நாதியில்லை.
அதேபோல் மானாமதுரை, இளையான்குடி, தமறாக்கி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிரமாக ஆற்று மணல் மற்றும் சவுடு மணல் கொள்ளை அதிபயங்கரமாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க மற்றும் தி.மு.கவினரே இந்த மணல் கொள்ளையில் அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர்.
கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சொந்த ஊரான தமறாக்கியில், இரவு பகலாக நடைபெறுவது தான் மிக கொடுமையான விசயம். தமறாக்கி தெற்கு பகுதியில் உள்ள எருமைக்குளம் கண்மாயிலும் உப்பாறு என்ற இடத்திலும் தான் ஜே.சி.பி டிராக்டர் உதவியுடன் மணல் கொள்ளை இரவு பகலாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அமைச்சரின் உறவினர்கள் தான் தொடர்ந்து இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் வாசிக்கிறார்கள். எத்தனை புகார் மாவட்ட கலெக்டர், எஸ்.பி என்று கொடுத்தாலும் எந்த வித நடவடிக்கையும் இல்லையாம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சித்தாநத்தம் அரியாறு ஆற்றுப்படுகைகளில் தினமும் 15 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை நடந்து கொண்டு தான் இருக்கிறது. அறியாற்றில் சல்லடை மூலம் மணலை சலித்து பின்னர் ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி, பின்னர் மாட்டு வண்டிகள் மூலமாக மணலை கடத்தி சென்று அதனை லாரி மூலமாக விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த வாரம் மணப்பாறை டி.எஸ்.பி அதிரடியாக ரெய்டுக்கு போகும்பொழுது மணல் மற்றும் மாட்டை விட்டு சென்று ஓடி விட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தாலும் மீண்டும் மணல் கொள்ளை நடந்து கொண்டு தான் வருகிறது.
அதேபோல் முசிறி, தொட்டியம் பகுதிகளில் போலீசார் ஆதாரவுடன் காவேரி ஆற்றையே கபளிகரம் செய்துவிட்டனர். இது டி.ஐ.ஜி கவனத்திற்கு செல்ல, இரண்டு காவலர்களை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து இருக்கிறார் டி.ஐ.ஜி.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கலியாவூரில் தாமிரபரணி ஆற்றிலும், வைப்பாற்றிலும் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. பொக்லைன் இயந்திரங்களால் தோண்டப்பட்டு தினமும் இரவில் லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. கலியாவூர், மணக்காடு, சீவலப்பேரி பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் திருநெல்வேலி மாநகராட்சிக்கான குடிநீரேற்று மையங்கள் செயல்படுகின்றன. இங்கும் தொடர்ந்து மணல் அள்ளப்படுகிறது. எத்தனை புகார் அளித்தாலும் வருவாய்த்துறையினரும் போலீசாரும் கண்டு கொள்வதில்லை என்பது தான் மிக கொடுமையான விசயம்.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் செம்மண், வண்டல் மண்கள் தனியார் பட்டா நிலங்களில் இருந்து கடத்துவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் நான்கு வழிச்சாலையில் புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே பட்டா நிலங்களில் இருந்து மணல் கடத்துவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. துப்பாசுபட்டி கிராமங்களில் மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு இரவு பகலாக மணல் கடத்துவது தொடர்கிறது. இது குறித்து நில உரிமையாளர்கள் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.
அதேபோல் சாத்தான்குளம் அருகே இளமால்குளம் குளத்து பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து கொண்டு தான் இருக்கிறது. சாத்தான்குளம் போலீசார் ஒப்புக்கு நடவடிக்கை எடுப்பதோடு சரி. மற்றபடி போலீசார் மற்றும் வருவாய்துறையினர் ஆசியோடு இசக்கிபாண்டி, இசக்கிமுத்து ஆகியோர் மணல் கொள்ளையை தொடர்ந்து நடத்தி வருகின்றனராம். இவர்கள் மேல் குண்டர் சட்டத்தை பாய்ச்சாமல் ஒப்புக்கு நடவடிக்கை எடுத்து விட்டு பின்னர் விட்டு விடுவார்களாம்.
நாகை, கடலூர் மாவட்டங்களுக்கிடையே மணல்மேடு அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் ரூ 420 கோடியில் கதவணை கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியின் போது, இரவு நேரங்களில் ஆற்று மணல் கொள்ளை ஜருராக நடந்து வருகிறது. அதேபோல் கட்டுமானப்பணியின் போது எடுக்கப்படும் மணல் வேறு இடத்தில் கொட்டி வைக்கப்படுவதாக கூறி, அவற்றை இரவு நேரத்தில் வெளியூருக்கு கடத்தி விடுகின்றனர். இது சம்பந்தமாக நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த கொள்ளிடம் கீழனை பாசன சங்க விவசாயிகள் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால் நடவடிக்கை தான் இல்லை.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் போலியான அனுமதி சீட்டுடன் அங்குள்ள கனிமவளத்துறை அதிகாரிகள் துணையுடன் கடத்தி வருகிறார்கள். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆவுடையார்கோவில் வெள்ளாற்று படுகையிலும் அரிமளம் அறியாறு மற்றும் வெள்ளாற்று பகுதியில் அந்த பகுதி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஒருவரே தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறார். பல வருடங்களாக நடந்து வந்தாலும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.
கடுமையான சட்டங்கள் போட்டாலே ஒழிய இந்த மணல் திருட்டை ஒழிக்க முடியும் இல்லையென்றால் மணல் கொள்ளையை அந்த ஆண்டவனாலும் தடுக்க முடியாது என்பதே இன்றைய நிலவரம்.