தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் அறிவிப்பு!

Filed under: சென்னை,தமிழகம் |

கோவை, ஜூலை 3

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு நீடிப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், என்று ஒட்டுமொத்தமாக மூடப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது நீண்ட காலம் ஆகலாம் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்திலுள்ள தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஊதியம் கொடுக்க முடியாமல் அந்தந்த பள்ளி நிர்வாகம் திக்குமுக்காடி கொண்டு வருகிறது.

தமிழக அரசு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. கொரோனா  வைரஸ் தொற்று நோயால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஜூன் மாதம் வரையிலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் எந்தவித கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு அறிவித்திருந்த நிலையில் தனியார் பள்ளி தாளாளர்களும் பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த நான்கு மாதங்களாக பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் பெருமக்களுக்கு சரிவர சம்பளம் தர முடியாமல் அந்தந்த தனியார் பள்ளி நிர்வாகம் பல வேதனைகளுக்கு உள்ளாகி உள்ளார்கள்.

தமிழகத்தில் சுயநிதி பள்ளிகளுக்காக குரல் கொடுப்பதற்கு பல்வேறு சங்கங்கள் இருக்கின்றன. அதன் அணுகுமுறைகள் கடந்த காலங்களில் வெவ்வேறாக இருந்தாலும் இன்று ஆசிரியர்களின் குடும்பங்களில் உள்ள வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 10/ 7/ 2020/ அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தனியார் பள்ளி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அவரவர் இல்லத்திற்கு முன்பு சமூக இடைவெளியுடன் உண்ணா நோன்பு கடைப்பிடிக்க இந்த அறப்போராட்டம் நடத்துவதற்கு ஒரு சங்கம் அறிவித்துள்ள நிலையில், இந்த போராட்டம் என்பது ஆசிரியர்களின் நலன் சார்ந்த பள்ளி நிர்வாகிகளின் நலன்சார்ந்த பிரச்சனை என்பதால் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் ஆதரவு தருகிறது. இந்த போராட்டம் என்பது மத்திய மாநில அரசை எதிர்த்து அல்ல, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பரிதாப நிலையை அரசுக்கு தெரிவிப்பதற்கு மட்டுமே. தனியார் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உண்ணாவிரத நோன்பை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பள்ளியில் இணையதள வகுப்பை ரத்து செய்துவிட்டு வகுப்பறையில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து இந்த உண்ணாவிரத நோன்பை கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் கிருஷ்ணராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.