கோவை ,மே 20
எங்கள் சமூகத்தை பொது இடத்தில் இழிவுபடுத்தி அவமரியாதை செய்து பிற சமூக மக்களிடம் பகை, வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2018 பிரிவு 3 (1) u இன் படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று 20/5/2020 ஆதிதமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோவை மாவட்ட கழக செயலாளர் கோவை இனியவன் புகார் மனு அளித்தார்.
கடந்த 14/5/2020 அன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டி. ஆர். பாலு, மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பில் பேசிய எம்.பி. தயாநிதிமாறன் இன்று தலைமைச் செயலாளரை சந்தித்து கொரோனா நிவாரண பணிகள் குறித்த ஆலோசனைகள் அடங்கிய மனுவை கொடுக்கச் சென்ற இடத்தில் தலைமைச் செயலாளர் எங்களை உரிய மரியாதையோடு நடத்த வில்லை என்று பேசியதோடு நிற்காமல் சம்பந்தமே இல்லாமல் நாங்கள் என்ன மூன்றாம்தர மக்களா ? உங்களை சொல்லுவார்களே தாழ்த்தப்பட்டவர்கள் என்று அதுபோல நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்று பேசியுள்ளார்.
இது தொலைக்காட்சிகளில் செய்தியாக வந்துள்ளது. இப்படி எங்கள் சமூகத்தை பொது இடத்தில் இழிவுபடுத்தும் நோக்கத்தோடு அவமரியாதை செய்து பிற சமூக மக்களிடம் பகை, வெறுப்பு , கொண்ட எண்ணத்தை தூண்டும் வகையில் பேசியது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களையும் அவமதிக்கும் செயலாகும். ஆகவே, எங்கள் சமூகத்தை பொது தளத்தில் இழிவாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் திருத்தம் சட்டம் 2018 பிரிவு 3 (1) u என் படி வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் ஆதிதமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் மாவட்ட கழக செயலாளர் கோவை இனியவன் புகார் மனு அளித்துள்ளார்.