தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பலி!

Filed under: இந்தியா |

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தாய் இறந்தது தெரியாமல் பட்டினி கிடந்து பலியாகினார்.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திலுள்ள தாசனஹடியைச் சேர்ந்த 62 வயதான ஜெயந்தி ஷெட்டி. இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தனது மனநலம் பாதிக்கப்பட்ட 32 வயது மகள் பிரகதியுடன் ஜெயந்தி தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் சர்க்கரை வியாதி காரணமாக ஜெயந்தியின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது. அதன்பின்னரும் அவர் தன்னையும் பார்த்துக் கொண்டு தனது மனநலம் குன்றிய மகளையும் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். கடந்த 13ம் தேதியளவில் உடல்நல குறைவால் ஜெயந்தி காலமாகியுள்ளார். ஆனால் அது அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு தெரியாததால் இறந்த தாயின் பிணத்தோடே 4 நாட்களுக்கும் மேலாக உணவு, தண்ணீர் இன்றி இருந்துள்ளார். அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது. அந்த வீட்டின் பக்கம் சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜெயந்தி இறந்து அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் விரைந்த காவல்துறையினர் ஜெயந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கமாக கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட பிரகதியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் தற்போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.