தாய், சேய் உயிரிழந்த சோகம்!

Filed under: தமிழகம் |

நீலகிரி மாவட்டத்தில் மானத்திற்கு பயந்து வீட்டில் பிரசவம் பார்க்க முயன்றதால் தாய், சேய் ஆகிய இருவரும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள நிமினிவயல் பகுதியை சேர்ந்த தேவனுக்கு 21 வயதுள்ள மகள் பிரியா அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்துக் கொண்ட நிலையில் பிரியா கர்ப்பமாகியுள்ளார். இது பிரியாவின் வீட்டினருக்கு தெரியாமல் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரியாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அவரது பெற்றோர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பிரியா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அவர் வயிற்று வலியால் துடித்ததால் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரியாவை அழைத்து செல்ல சொல்லியுள்ளனர். ஆனால் பிரியாவின் பெற்றோர் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று நினைத்து பிரியாவை வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டில் வைத்தே பிரசவம் பார்க்க முயன்றுள்ளனர்.
இதனால் சிசு பிறந்தபோதே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதிகமான ரத்தப்போக்கு காரணமாக பிரியாவும் இறந்துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரியாவின் பெற்றோரை கைது செய்ததுடன் பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். புதைக்கப்பட்ட குழந்தையின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.