தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்குவதற்கான முன்னறிவிப்பு!

Filed under: இந்தியா,சென்னை,தமிழகம் |

புது டெல்லி,மே 16

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம், கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும், வழக்கமான ஜூன் 1-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கக்கூடும். கேரளாவில் இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக, ஜூன் மாதம் 5-ஆம் தேதி பருவமழை தொடங்கக்கூடும்.

இந்தியப் பருவமழை மண்டலத்தில், முதல்கட்டப் பருவமழை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பெய்வதுடன், பின்பு பருவக்காற்று வங்கக் கடலில் வடக்கு மேற்காக வீசுவதுண்டு. பருவமழையின் தொடக்கம் மற்றும் முன்னேற்றம் தொடர்பான புதிய தேதிகளின்படி, தென்மேற்குப் பருவமழை அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே மே 22-ஆம் தேதி பெய்யத் தொடங்கும். 

தற்போது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அருகில் உள்ள பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் அது தீவிரமடைந்து, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொள்ள வாய்ப்புள்ளது.  அது மேலும் தீவிரமடைந்து தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் மே 16-ஆம் தேதி புயல் சின்னமாக மாறக்கூடும். இதனால், அடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு அந்தமான் கடல் பகுதி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கு உகந்த சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.