மயிலாடுதுறை, ஏப்ரல், 21
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜன் மீது தேவையற்ற விமர்சனம் செய்த நடிகை ஜோதிகாவுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம்.
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் மீது தேவையற்ற விமர்சனங்கள் செய்துள்ளார். இதற்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜன் தமிழுக்கும், சைவத்துக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் அழியாத புகழை தேடி கொடுத்துள்ளார். தஞ்சை பெரிய கோயில் தமிழ் பண்பாட்டின் வெளியீடு. சைவசமயத்தின் திறவுகோல் . சைவமும் தமிழும் தனது இரு கண்களாய் ஏற்று இரண்டையும் தன் வாழ்நாள் முழுவதும் ராஜராஜசோழன் வளர்த்ததன் அடையாளமே தஞ்சை பெரிய கோயில் ஆகும்.
தஞ்சை பெரியகோயிலின் மாண்பை நன்கு உணர்ந்த மத்திய அரசு அந்தக் கோயிலை தனது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. தஞ்சை பெரிய கோயிலை கட்டியதற்கு பதிலாக ராஜராஜன் பள்ளிக் கூடங்களையும், மருத்துவமனைகளும் கட்டியிருக்கலாம் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளது, அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் நடிகை ஜோதிகாவிற்கு அவருடைய மாமனார் சிவகுமாரும் அவருடைய கணவர் சூர்யாவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ராஜராஜனை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் அருகதை இல்லை அதற்கு ஜோதிகாவும் விதிவிலக்கல்ல. ராஜராஜன் மீதும் தஞ்சை பெரிய கோவில் மீதும் தேவையற்ற விமர்சனம் செய்த நடிகை ஜோதிகா உடனடியாக அந்த விமர்சனங்களை வாபஸ் பெற வேண்டும் , தவறினால் நடிகை ஜோதிகா தமிழகம் முழுவதும் கடும் சட்ட போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.