நாகை மாவட்டத்தில் ‘நான் தான் டாப்பு’ மத்தவனெல்லாம் டூப்பு !!!

Filed under: தமிழகம் |

Jayapalசர்வாதிகார அமைச்சர் ஜெயபாலின் அடாவடி ஆட்டம்!
கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் இழவு வீட்டில் பிணமாகவும் இருப்பது என்றால், நாகப்பட்டினம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் மீன் வளத்துறை அமைச்சருமான ஜெயபாலுக்கு, மிகவும் பிடித்தமான ஒன்று!
இவரைத் தவிர, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அண்ணா தி.மு.க.வை சேர்ந்த எந்த நிர்வாகிகளும் அரசு விழாவில் கலந்துகொள்வது, இவருக்குப் பிடிக்காது! வெறும் இருபத்தையாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குகிற நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இலவச ஆடுகள் வழங்குகிற நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இவரை வைத்துதான் வழங்கவேண்டும் என்று அடம்பிடித்ததின் காரணமாகவே, பல மாதங்கள் தாமதமாக அந்த விலையில்லா பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது! மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சியில், இவர் வந்துதான் அந்தப் பொருட்களை கொடுக்கவேண்டும் என்று சொல்வதால், கால தாமதமாகத்தான், கடந்த ஆண்டில் அரசின் இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டது!
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களால் கட்டப்பட்ட கட்டிடங்களைக்கூட, ஜெயபால்தான் திறந்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார்! சமீபத்தில், பூம்புகார் தொகுதி, ஆக்கூர் முக்கூட்டில், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழாவில், தன் பெயர் போடாமல் இருந்ததற்காக, கடுமையாக சத்தம் போட்டுள்ளார், ஜெயபால்!
மாவட்டத் தலைநகரில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முக்கிய மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை இவர் அழைப்பதே இல்லை! அவர்களுக்குத் தகவல் சொல்வதும் இல்லை! சமீபத்தில் நடைபெற்ற கூட்டுறவு வாரவிழாவில் இவர் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது, அவ்விழாவில் வேறு எவரும் கலந்துகொள்ளக்கூடாது என்று, ஜெயபால் வாய்மொழி உத்தரவு போட்டதின் காரணமாக, அந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை! கூட்டுறவு சங்க முக்கிய நிர்வாகிகளான கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆசைமணி, நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பழனிச்சாமி ஆகியோரைக் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்காத காரணத்தால், அந்த விழா ஏதோ கடமைக்காக அதிகாரிகளால் நடத்தப்பட்ட விழாபோல் காட்சியளித்தது!
கடந்த இரண்டாண்டு காலமாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களான சீர்காழி சக்தி, பூம்புகார் பவுன்ராஜ், வேதாரண்யம் காமராஜ் ஆகியோரையும், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியனையும் அழைக்காமலே, அவர்கள் கலந்து கொள்ளாமலே, அரசு திட்டங்கள் மற்றும் விழாக்கள் நடைபெற்று வருகிறது! தன்னைத் தவிர யாரும் கலந்துகொள்ள கூடாது. தான் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெயபால், மற்ற ஐந்து சட்டமன்ற தொகுதிகளான பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில், அரசின் மூலமாக எந்த திட்டமும் செயல்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்கிறார்!
இவரது தொகுதியான நாகப்பட்டிணத்தில் மட்டும், 18 பாலங்களை கட்டுவதற்கு ஏற்பாடு செய்த இவர், மற்ற தொகுதிகளுக்கு இது மாதிரி பாலங்கள், கட்டிடங்கள், அலுவலகங்கள் எதுவும் அரசின் மூலம் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளும் கீழ்த்தரமான செய்கையில் ஈடுபடும் இவரால், மற்ற ஐந்து தொகுதிகளும், எம்.எல்.ஏ.க்கள் இருந்தும், அனாதை தொகுதிகளாக காட்சியளிக்கிறது! அதன் பயன், வரப்போகிற பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்! ‘இரட்டை இலை’க்கு வாக்கு கேட்டால், தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று, வாக்காளர்கள் கேட்பார்கள்! அதற்கு, ஜெயபாலை காட்டிக்கொடுக்க முடியுமா? என்று, எம்.எல்.ஏ.க்கள் மனதிற்குள் புகைந்து கொண்டுள்ளனர்!
அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் பாராளுமன்ற தேர்தலின்போது மக்களை எந்த முகத்தோடு சென்று பார்ப்பது என்று இப்போதே கிலி பிடித்தது போல இருக்கிறார்கள். இதை தமிழக முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்றால் அதனால் எங்கே தங்கள் அரசியல் வாழ்வை ஜெயபால் பாழடித்து விடுவாரோ என்று அஞ்சி பயந்து கொண்டு இருக்கின்றனர். மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி இவரால் முடங்கிப்போய் கிடக்கிறது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயபாலை இந்த காரணத்தைக் கொண்டே, மயிலாடுதுறை பகுதி மக்கள் விரட்டிவிடத் தயாராக இருக்கின்றனர்!
ஆக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜெயபாலின் சர்வாதிகார அடாவடி செயல்களால், அம்மாவின் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது என்ற புலம்பல்தான், நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் எதிரொலிக்கிறது! முதல்வர் அம்மா, ஜெயபாலின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கையை விரைவாக எடுத்தால், நாகை எம்.பி. தொகுதி தேறும்!