பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியாகும் சசிகலா.. நேராக ஓசூர் ஹோட்டலில் தங்குகிறாரா?.

Filed under: அரசியல்,தமிழகம் |

பெங்களூரு: விடுதலையாகி வெளியே வரும் சசிகலா கர்நாடக- தமிழக எல்லையான ஓசூர் அல்லது சூளகிரியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து தலா ரூ 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடுகளை வெளியே கொண்டுவந்தது ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஆவார். இந்த முறைகேடுகளால் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதில் சிக்கல் எழுந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சசிகலா விடுதலை குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு பெற்றார். அதில் அவர் ஜனவரி 27-ஆம் தேதி அவர் விடுதலையாகிறார் என சிறை துறை தெரிவித்துள்ளது. அவர் முன்பு சிறையில் இருந்த நாட்கள் கழிக்கப்பட்டு, பரோலில் சென்ற நாட்கள் கூட்டப்பட்டு இந்த தேதியில் விடுமுறை ஆகிறார்.

சசிகலா கடந்த மாதம் அபராதத் தொகையை செலுத்திவிட்டார். இதையடுத்து 27-ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியாகிவிட்டது. இவரை வரவேற்க அமமுகவினர் இப்போதே தயாராகிவிட்டனர். விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் அமமுகவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

தமிழக எல்லைக்கு வருவதற்கே இரவு நேரம் ஆகிவிடும் என்பதால் சசிகலா, சென்னை செல்லாமல் ஓசூரிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அல்லது சூளகிரி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் தங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஹோட்டலை பார்வையிட்டு புக்கிங் செய்துவிட்டனர்.

உளவுத் துறை போலீஸாருக்கும் தகவல் கொடுத்தாகிவிட்டது. நிர்வாகிகள் தங்குவதற்கும் ஹோட்டல் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன. ஓசூரில் 27-ஆம் தேதி தங்கிவிட்டு 28-ஆம் தேதி காலை கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சசிகலா சென்னை வருகிறார். வழிநெடுகிலும் கிட்டதட்ட 50 இடங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.