பஸ் கட்டணத்தை உயர்த்தி ஆந்திர அரசு!

Filed under: இந்தியா |

ஆந்திர அரசாங்கம் டீசல் விலை உயர்ந்ததால், பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் பேருந்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் விரிவாக கூறியதாவது,
“கொரோனாவால் மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரை ஆந்திரா அரசு போக்குவரத்து கழக வருவாயில் ரூ.5,680 கோடி சரிவு ஏற்பட்டது. டிக்கெட் விலை கடைசியாக 11 டிசம்பர் 2019 அன்று உயர்த்தப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.67 ஆக இருந்தது. ஆனால், இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.107க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 60 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து கழகத்திற்கு கடுமையான நிதி சுமை ஏற்பட்டுள்ளது. எனவே இதை சமாளிக்க டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கிராமங்களுக்கு இயக்கப்படும் பல்லேவெலுகு & நகர பகுதியில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் ரூ.2-ம், எக்ஸ்பிரஸ், சிட்டி மெட்ரோ எக்ஸ்பிரஸ் & மெட்ரோ டீலக்ஸ் சேவைகளுக்கு ரூ.5ம், சூப்பர் சொகுசு & ஏசி சேவைகளுக்கு ரூ.10ம் கூடுதலாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரகம் கூறியுள்ளது.
இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.