பாஜக அரசை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளையே தொடங்காதப் பற்றி பேசினார்.

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உரையாற்றினார்.அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கருணாநிதி என்றாலே கிங் தான். கிண்டில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு கலைஞர் பெயர் தான் பொருத்தம். வாழ்ந்த காலம் முழுவதும் கிங் ஆகவும், கிங் மேக்கராகவும் இருந்தவர் கருணாநிதி. பதினைந்தே மாதத்தில் இந்த மருத்துவமனையை பிரமாண்டமாக கட்டி இருக்கிறோம். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன்.. பதினைந்தே மாதத்தில் இந்த மருத்துவமனையை கட்டி இருக்கிறோம். இதுதான் மிக முக்கியமான சாதனை.
2015ல் அறிவித்துவிட்டு 2023ஆம் ஆண்டு வரை வரை இரண்டாவது செங்கலை கூட எடுத்துவைக்காத அலட்சியத்தோடு இருக்கிறார்கள். ஒரு செங்கல்லின் கதை உங்களுக்கு தெரியும். இதோ முன்னாடி அமர்ந்திருக்கிறார் (உதயநிதி ஸ்டாலினை குறிப்பிடுகிறார்) மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை அப்படி இருக்க, அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் நாம் இந்த மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பி சாதித்திருக்கிறோம். மக்களுக்காக உண்மையான நோக்கத்தோடு திட்டங்களை தீட்டுபவர்களுக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டங்களை அறிவிப்பவர்களுக்கும் இருக்கக்கூடிய வேறுபாட்டை மக்கள் நன்கு அறிவார்கள். 2021 மே 7ஆம் நாள் திமுக அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. ஜூன் 3ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளன்று, திமுக அரசு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் முக்கியமானது தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்பதாகவும். மருத்துவமனைக்கான 4.89 ஏக்கர் நிலம் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவ வளாகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. 500 படுக்கைகள் என்ற எண்ணிக்கையை பிறகு 1000 என உயர்த்தினோம். 2022 மார்ச் 21 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இது 2023 ஜூன் மாதம். மொத்தம் 15 மாதத்திற்குள் இந்த மாபெரும் மருத்துவமனை கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89 ஏக்கர் நிலத்தில் சுமார் 51,429 ச.மீ.,பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், 10 லிஃப்ட்டுகள், உணவகங்கள் என நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.” என உரையாற்றினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.