பிரதமர் நிவாரண நிதிக்கு ஏழ்மையை பொருட்படுத்தாமல் தாராளம்

Filed under: தமிழகம் |

மதுரை, ஏப்ரல் 22

மதுரையில், 65 வயதான பெண் ஒருவர், உணவுக்காக வைத்திருந்த பணத்தை, பிரதமருக்கும், அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களின் நிவாரண நிதிக்கும் நன்கொடையாக வழங்கி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

மதுரையில் உள்ள ரிசர்வ் லைன் அஞ்சலகத்திற்கு இன்று வந்த, 65 வயதான திருமிகு. கார்த்திகா பாலநாயகம் அம்மாள், ரூ.100/- வீதம், 32 மணியார்டர்களை அனுப்பினார். பிரதமருக்கும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் நிவாரண நிதிக்காக இந்தத் தொகையை அனுப்புவதாக அவர் தெரிவித்தார். மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் அவர், தனது உணவுக்காக வைத்திருந்த பணத்தை அனுப்புவதாகவும், யாரிடமும் இந்தத் தொகையை வசூலிக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து நாடுகளுக்கும், இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக, வங்கி மூலம் பணம் அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அவரின் ஈ-மணியார்டரை மதுரை ரிசர்வ் லைன் அஞ்சலகத்தில் பணியாற்றும் திருமதி தேவி புக் செய்தார். படிவங்களை அங்குள்ள அனைத்து தபால்காரர்களும் நிரப்பிக் கொடுத்தனர்.

பணம் இருந்தும் பலர் உதவ முன்வர தயங்கும் இந்த காலத்தில், தனக்காக வைத்திருந்த பணத்தை, நன்கொடையாக வழங்கியுள்ள இந்த வயதான பெண்ணின் செயல், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.