புதுடெல்லி, செப் 27:
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தில், போதிய இடவசதி இல்லாததால், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை உருவாக்கி அதன் கட்டுமான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு அருகிலேயே, ரூ.971 கோடி மதிப்பில், புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
2022ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி, அதாவது சுதந்திர தினத்திற்குள், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகளை முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து நேற்று நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு, புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இரவு 8.45 மணியளவில் அங்கு சென்ற பிரதமர் மோடி, சுமார் ஒரு மணிநேரம், அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பார்த்து, கட்டுமான பணி நிலவரம் குறித்து, கட்டுமான நிபுணர்களிடம் கேட்டறிந்தார்.