கொழும்பு: புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேஷ அறிக்கையொன்றை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முற்படுவதாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு, பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளை விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபடுத்தி அந்த அமைப்புகள் மீது முந்தைய அரசாங்கம் தடை விதித்தது.
ஆனால் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடி தொடர்புகளை வைத்துள்ளதற்கான எந்தவிதமான உறுதியான சான்றுகளும் முன்வைக்கப்படவில்லை. இதேவேளை இந்தத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள சில தமிழர்கள் ஏற்கனவே இறந்துவிட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் முயற்சியில், புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதுடன், அதற்கான முதல் நடவடிக்கையாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் சிங்களவர்களோ, தமிழர்களோ அல்லது முஸ்லிம்களாகவோ இருந்தாலும், அவர்கள் நல்லிணக்க முயற்சிக்கு மிகவும் முக்கியமான பங்களிப்பை ஆற்றக்கூடியவர்களாக இருக்கின்றனர். அத்துடன், இலங்கையை ஒரு தேசமாக முன்நோக்கி நகர்த்துவதற்கு புலம்பெயர் சமூகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதற்கு பல்லின, கலாசார, மொழி, மதங்களைக் கொண்ட ஜனநாயகக் கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது” என்று கூறினார்.
முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான அரசு 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்ததுடன், புலம்பெயர் நாடுகளில் வாழும் 424 தனிநபர்கள் மீதும் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.