பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே பால் தட்டுப்பாடின்றி விநியோகம்!

Filed under: சென்னை,தமிழகம் |
சென்னை,  ஏப்ரல் 26
 
சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 5மாவட்டங்களில் இன்று முதல் முழுமையான ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்ததும் பொதுமக்கள் தேன் கூட்டில் கல்லெறிந்தது போல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க நேற்றைய தினம் (25.04.2020) கடைகளிலும், சந்தைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக கூடி விலையில்லா கொரானாவை பரப்பி விடுவார்களோ..? என்கிற அச்சத்தை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்வது தொடர்பாக நேற்று மதியம் எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்  சங்கத்தின் மாநில நிர்வாகிகளோடும், ஆரோக்யா, ஹெரிடேஜ், திருமலா, டோட்லா உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்களின் உயரதிகாரிகளோடும் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி அதிகாலை 4.00மணி முதல் காலை 8.00மணி வரை பால் முகவர்களின் விநியோக மையங்களில் பொதுமக்களுக்கு பாலினை தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி விற்பனை செய்வது என முடிவெடுத்து அதனை ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் முழுமையான ஊரடங்கின் முதல் நாளான இன்று மேற்கண்ட மாவட்டங்களில் காலை 6.00மணிக்கெல்லாம் பால் முகவர்களின் விநியோக மையங்களில் பால் விற்றுத் தீர்ந்து போய் பொதுமக்கள் பால் கிடைக்காமல் அல்லல்பட்டனர். காரணம் நாளைக்கு பால் கிடைக்குமோ..? கிடைக்காதோ..? என்கிற அச்சத்தில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களின் ஒரு நாள் தேவைக்கு அதிகமான பாலை வாங்கிச் சென்றதால் 6.00 மணி கடந்து வந்த பலருக்கும் பால் வழங்க முடியாத சூழல் பால் முகவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 
பால் தினசரி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதனைக் கேட்காமல் பால் முகவர்களிடமே பொதுமக்கள் பலர் சண்டைக்கு வந்த நிகழ்வுகள் பல இடங்களில் அரங்கேறியுள்ளதும், பால் விநியோக மையங்களை காலை 6.00 மணிக்கு மேல் திறந்தால் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறையினர் நேற்று பால் முகவர்களை மிரட்டிய நிகழ்வுகளும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. இது சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களாகிய எங்களுக்கு மிகுந்த மனவேதனையை தந்திருக்கிறது.
 
மழை, வெள்ளம், புயல் என எந்த ஒரு இயற்கை பேரிடர் காலங்களாக இருந்தாலும் இது வரை பொதுமக்களுக்கு பால் விநியோகத்தை பால் முகவர்கள் தங்குதடையின்றி செய்து வந்திருக்கின்றனர். மேலும் பால் விநியோகத்தை பொறுத்த வரை ஆவின் நிறுவனத்தின் ஊழியர்களாலோ அல்லது இணையதள நிறுவனங்களாலோ குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்குதடையின்றியும், சரியான விலைக்கும் விநியோகம் செய்வதும் என்பது இயலாத காரியம். 
 
அதற்கு சிறந்த உதாரணம் Zomoto, Dunzo போன்ற இணையதள நிறுவனங்களின் செயல்பாட்டை சொல்லலாம். அந்நிறுவனங்களில் ஆவின் பால் நாள் முழுவதும் தடையின்றி கிடைக்கும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் “டெட்ரா பேக்” எனப்படும் UHT பால் மட்டுமே அவர்களது சேவையில் கிடைக்கிறது. பால் முகவர்களின் சேவையில் கிடைக்கும் ஆவின் நைஸ், கிரீன் மேஜிக், பிரிமியம் வகை பால் குறிப்பிட்ட இணையதள சேவையில் கிடையாது. அதுவும் கூட காலை 7.00மணிக்கே டெட்ரா பேக் ஸ்டாக் இல்லை என்கிற தகவல் தான் அதன் இணையதளத்தில் இருக்கிறது. அத்துடன் 12 கிலோ வரை சேவைக்கட்டணமாக 60.00 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 
 
உதாரணத்திற்கு ஒரு வாடிக்கையாளர் 62.86 ரூபாய் மதிப்புள்ள ஒரு லிட்டர் ஆவின் சமன்படுத்தப்பட்ட பால் வாங்கினால் அதற்கான சேவை கட்டணமாக 60.00ரூபாய் செலுத்த வேண்டும். அப்படியானால் ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் 122.86 ரூபாய் ஆகும். இதுவே பால் முகவர்களிடம் எனும் போது மேற்கண்ட சேவை கட்டணமின்றியும் பொதுமக்கள் வாங்கி கொள்ள முடியும்.
 
அது மட்டுமின்றி கொரானாவெனும் இந்த கொள்ளை நோயிடமிருந்து தற்காத்துக் கொள்ள உலகமே வீடுகளுக்குள் முடங்கிப் போய் கிடக்கும் நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் போன்று பால் முகவர்களும் தன்னலம் பாராமல் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யும் பணியை கடும் சிரத்தையுடன் செய்து வருகிறார்கள்.
 
எனவே பொதுமக்களும், காவல்துறையும் பால் முகவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே முழுமையான ஊரடங்கு நேரம் மட்டுமின்றி எந்த நேரமாயினும் பால் தட்டுப்பாடின்றி பால் முகவர்களால் பாலினை விநியோகம் செய்திட முடியும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு பால் விநியோகம் செய்யும் நேரத்தை தமிழக அரசு முறையாக அறிவித்து, பால் முகவர்களுக்கு காவல்துறையினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட உத்தரவிடுமாறு தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.