மகளுக்கு பாலியல் தொல்லை!

Filed under: தமிழகம் |

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை, தடாகத்தை சேர்ந்த வேலுச்சாமி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், “எனது மகள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். எனது மகளுக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அந்த வாலிபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று போலீசாரிடம் வேலுச்சாமி தெரிவித்தார். போலீசார் அவரை கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொழிலாளி ஒருவர், உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.