மகள் இறந்த சோகத்தில் மாரடைப்பால் உயிரிழந்த தந்தை!

Filed under: சென்னை |

கல்லூரி மாணவி ஒருவரை மின்சார ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்து தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர். மாணவி இறந்த துக்கத்தை தாங்கிக் கொள்ளாத தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு, கல்லூரி மாணவி சத்யாவை தள்ளி படுகொலை செய்துவிட்டு சதீஷ் என்ற இளைஞர் தப்பி ஓடினார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மகளை இழந்த சோகத்திலும், மன அழுத்தத்திலும் இருந்த தந்தை மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழந்ததார். இன்று அதிகாலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவரை உறவினர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர். அப்போது அவர் வழியிலேயே உயிரிழந்ததாக அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம்(47). கால் டாக்ஸி ஓட்டுநர். இவரது மனைவி ராமலட்சுமி(43) ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சத்யா (20) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தயாளன் என்பவரும் ஆதம்பாக்கம் ராஜா தெருவில் வசித்து வந்தார். இவரது மகன் சதீஷ்(23), சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சத்யாவும், சதீஷும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சிலமாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சத்யா நேற்று மதியம் 1 மணியளவில் கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்த போது, முதலாவது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த சதீஷ், சத்யாவிடம் சென்று பேசியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த சதீஷ், தாம்பரத்திலிருந்து நடைமேடைக்குள் வந்துகொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சற்றும் எதிர்பாராத வகையில், சத்யாவை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் சத்யா, ரயில் சக்கரத்தில் சிக்கி, தலை துண்டித்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணநேரத்தில் நடந்துமுடிந்த இந்த கொடூர சம்பவத்தைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் சதீஷை பிடிக்க முயன்றனர் ஆனால் அகப்படாமல் ஓடிவிட்டார். சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை போலீசார் ஈசிஆர் பகுதியில் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.