மத்திய அமைச்சரின் பெருமிதம்!

Filed under: அரசியல்,இந்தியா,சினிமா |

மத்திய அமைச்சர் எல்.முருகன் “கேன்ஸ்’’ திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்து கொண்டதில், “ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்’’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் என்ற நகரில் நடைபெறும். இவ்வாண்டு 76வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 27ம் தேதி வரை என மொத்தம் 12 நாட்கள் இந்த திரைப்பட விழா நடைபெறவுள்ளது. விழாவில், இந்தியாவின் சார்பில், நடிகை ஈஷா குப்தா, சாரா அலி கான், மனுஷி சில்லார் உட்பட இந்தியா சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். மேலும், இத்திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டுள்ளார். அவர் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன். ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் #G20India சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம்’’ என்று பதிவிட்டுள்ளார்.