மத்திய உரத்துறை அமைச்சகத்தை அன்புமணி சாடல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உழவர்கள் மானியத்துடன் கூடிய உரங்களை வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத்தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல், மானிய செலவினங்கள் முறைப்படுத்தவும், மானிய விரயங்களை தவிர்க்கவும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் தெரிவிக்க வேண்டுமென்று அறிவித்துள்ளது. இதற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில், “மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் (பொது/ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி) தெரிவிக்க வேண்டியது கட்டாயமென்று நடுவண் உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உர விற்பனைக் கருவியின் மென்பொருளில் இதற்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. உர மானியம் பெறுவோரின் சாதிப் பிரிவுகளை அறிந்து அவற்றின் அடிப்படையில் உர மானியம் வழங்க நடுவண் அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற ஐயம் உழவர்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது. உழவர்களின் இந்த ஐயத்தை உடனடியாக போக்க வேண்டியது நடுவண் அரசின் கடமை. உழவுத்தொழில் புனிதமானது; அனைவருக்கும் பொதுவானது. அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு. எனவே, உரம் வாங்கும் உழவர்களின் சாதிப் பிரிவை கேட்கும் விற்பனைக் கருவியின் மென் பொருளில் இருந்து நடுவண் அரசு நீக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.