மருத்துவர் இராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து !

Filed under: சென்னை,தமிழகம் |

ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டு என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்துச் செய்தி.

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும் என்பது உறுதி.

யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத இயேசுபிரான் தீயவர்களால் சிலுவையில் அறையப்பட்டதைப் போன்று, உலகம் முழுவதும் ஒரு பாவமும் செய்யாத அப்பாவி மக்கள் கொரோனா வைரஸ் என்ற தீமையால் தாக்கப்பட்டிருக்கின்றனர். இன்று வரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு   இருப்பதுடன், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். சிலுவையில் அறையப்பட்ட  இயேசு கிறிஸ்து அடுத்த 3 நாட்களில் உயிர்த்தெழுந்து வந்ததைப் போன்று உலக மக்களும் மருத்துவர்கள் உதவியால் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்டு வருவார்கள் என்பது உறுதியாகும்.

தமிழகம் என்றால் வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டும். தமிழக மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். அதற்காக இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த நாளில் அனைத்துத் தரப்பினரும் உறுதியேற்றுக் கொள்வோம்.