கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலை உள்ளது. இது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், “மாணவர்களின் நலன் கருதி தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களும் கல்விக் கடனைப் பெறலாம். புத்தகக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றை ஏற்கும் வகையில் கடன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.