மிக அதிக கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

Filed under: தமிழகம் |

மிக அதிக கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரும் 12-ம் வரை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். இலங்கைக்கும் – குமரி கடல் பகுதிக்கும் இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 14-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.. நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.