கடந்த 9 நாட்களாக “70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் புகைப்படக் கண்காட்சி மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள மேனேந்தல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையிட்டார்.
செய்தியாளர்களிடம் விஜய்சேதுபதி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது நமது ஆண்டவர்கள், ஆள்கிறவர்கள் பற்றி தெரிய வருகிறது. கண்காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு முதலமைச்சர் குறித்த புரிதல் ஏற்பட வேண்டும். அவர்கள் முதலமைச்சர் 70 ஆண்டு அரசியலில் எப்படி முன்னுக்கு வந்தார் என்பதை அவர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். இளைஞரணி என்ற ஒரு அமைப்பு இந்தியாவிலேயே திமுகவில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. பெரியார் அண்ணா, கலைஞர் அவர்களுடன் முதலமைச்சர் இருந்தது பெரிய வியப்பாக உள்ளது.” என்று கூறினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு பற்றி படம் எடுத்தால் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, “படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கண்காட்சி பார்க்கும்போது வாரிசு அடிப்படையில் அவர் முததலமைச்சராக வரவில்லை என்பது தெரிகிறது. எனக்கு அரசியலுக்கு வர எண்ணம் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரணமாக முதலமைச்சராகவில்லை. அவரின் கடின உழைப்பு இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.