முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நூலின் விலை உயர்வின் காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரின் கடிதம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர் கதையாகவே உள்ளது. இதனை தொடர்ந்து பல பொருட்களும் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பின்னலாடைகளுக்கான நூலின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பின்னலாடை நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பின்னலாடைக்கான நூலின் விலையை குறைக்க கோரி பின்னலாடை நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் நூல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
இதனால் திருப்பூர், ஈரோடு, கரூர் உட்பட்ட பல மாவட்டங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நூல் விலை உயர்வால் ஜவுளித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நூல் விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.